அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய வேண்டும் பாரதீய ஜனதா வலியுறுத்தல்

அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தி உள்ளது.

Update: 2019-05-03 23:30 GMT

புதுச்சேரி,

பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

புதுவை மாநில அரசு அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்து இணையதளத்தில் வெளியிட்டது. ஆனால் 2 ஆண்டுகளாகியும் இந்த நடைமுறை அமல்படுத்தப்படவில்லை. ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆய்வு நடத்தி கல்வி கட்டணம் நிர்ணயம் செய்ததை அமல்படுத்தாததன் மூலம் ஏழை, எளிய நடுத்தர மக்களை முதல்–அமைச்சர் நாராயணசாமி ஏமாற்றி வருகிறார்.

புதுச்சேரி மக்கள் தாங்கள் வாங்கும் சம்பளத்தில் 30 சதவீதத்தை குழந்தைகளின் பள்ளி கட்டணமாக செலுத்தி விடுகின்றனர். பெரிய மாநிலமான தமிழகத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் இருந்தும் 12–ம் வகுப்புக்கே அதிகபட்சமாக வருடத்துக்கு ரூ.15 ஆயிரம் மட்டுமே வசூலிக்கின்றனர். ஆனால் இங்குள்ள தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. முதல் 12–ம் வகுப்புவரை பல லட்சம் ரூபாய் வசூலிக்கிறார்கள்.

புதுவையில் இயங்கும் அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஜூன் மாதத்துக்கு முன் கல்வித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கட்டணம் அதிகம் வசூலிக்கும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்யவேண்டும். இன்னும் ஒரு வாரத்திற்குள் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் கல்வித்துறை மற்றும் தனியார் பள்ளிகளின் முன்பாக போராட்டங்கள் நடத்தப்படும்.

அனைத்து மாநிலங்களிலும் சுப்ரீம் கோர்ட்டு மற்றும் மத்திய அரசின் ஆணைப்படி பள்ளிகளில் ஏழைகளின் குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் புதுச்சேரியில் இத்திட்டத்தை அரசு செயல்படுத்தவில்லை. வரும் கல்வி ஆண்டில் 25 சதவீத இடஒதுக்கீட்டை அனைத்து பள்ளிகளிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கு வழங்கவேண்டும். இதை பின்பற்றாத பள்ளிகளுக்கு எதிராக தமிழக மக்கள் போராட்டங்களை நடத்துவதுபோல் ஒட்டுமொத்த மக்களும் தைரியமாக போராட்டங்களை நடத்த வேண்டும். அனைத்து அங்கன்வாடிகளிலும் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளை இந்த ஆண்டே தொடங்கவேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்