வங்கியில் ரூ.1.35 கோடி அடமான கடன் பெற்று மோசடி: சி.பி.ஐ. விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
ராஜபாளையம் வங்கியில் ரூ.1 கோடியே 35 லட்சம் அடமான கடன் பெற்று மோசடி செய்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ராஜபாளையம்,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவர் நெல் வியாபாரம் செய்து வருவதாகவும், 7 ஆயிரத்து 600 நெல் மூட்டைகள் குடோனில் வைத்திருப்பதாகவும். அதை வைத்து அடமான கடன் வழங்க வேண்டும் என்றும் ராஜபாளையத்தில் உள்ள ஒரு வங்கியில் விண்ணப்பித்தார். அதன்பேரில் நெல் மூட்டைகளை வங்கி அதிகாரிகள் பரிசோதித்தனர். பின்னர் அவருக்கு கடந்த 2017–ம் ஆண்டில் ரூ.76 லட்சம், ரூ.20 லட்சம் என 2 தவணையாக மொத்தம் ரூ.96 லட்சம் அடமான கடன் வழங்கப்பட்டது.
இதேபோல ராஜபாளையத்தை சேர்ந்த சுவாதிக் என்பவருடைய 3 ஆயிரத்து 600 நெல் மூட்டைகளுக்கு அடமான கடனாக ரூ.39 லட்சம் வழங்கப்பட்டது. இதையடுத்து அவ்வப்போது குடோனில் இருந்த நெல் மூட்டைகளை வங்கி அதிகாரிகள் சோதனை செய்து வந்தனர். அந்த சமயத்தில் மூட்டைகள் இருந்த வரிசையில் மாற்றம் இருந்ததால் சந்தேகப்பட்ட வங்கி அதிகாரிகள், அவற்றை சரிபார்த்தனர். அப்போது வேறொரு நபருக்கு சொந்தமான நெல் மூட்டைகளை தங்களது என காட்டி, கடன் வாங்கியதும் தெரியவந்தது.
இதுகுறித்து வங்கி அதிகாரிகள் சார்பில் கார்த்திக், சுவாதிக் மொத்தம் ரூ.1 கோடியே 35 லட்சம் கடன் பெற்று, அதை செலுத்தாமல் மோசடி செய்ததாகவும், மற்றும் அவர்களின் நெல் மூட்டைகளை பரிசோதித்து மேற்பார்வை செய்து சான்றிதழ் வழங்கியதாக என்.பி.எச்.சி. நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரின்பேரில் கார்த்திக், சுவாதிக், அவருக்கு ஜாமீன்தாரரான வெங்கடேஷ், என்.பி.எச்.சி. நிறுவனத்தை சேர்ந்தவர்கள் உள்பட 18 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
இதையடுத்து இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று என்.பி.எச்.சி. நிறுவனத்தை சேர்ந்தவர்களும், வெங்கடேஷ் என்பவரும் தனித்தனியாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது வங்கி சார்பில் ஆஜரான வக்கீல்கள் என்.இளங்கோ, ஏ.நாகராஜன் ஆகியோர், “இந்த மோசடி குறித்து 2017–ம் ஆண்டு டிசம்பர் மாதம் புகார் செய்யப்பட்டது. ஆனால் அதன் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் புகார் செய்ததன்விளைவாக பல மாதங்கள் கழித்து 27.8.2018 அன்று தான் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள வெங்கடேஷ் தான் கடன் மோசடிக்கு காரணம் என்று சுவாதிக் புகார் கூறியுள்ளார். வெங்கடேசின் முன்ஜாமீன் மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதை மறைத்து கீழ்கோர்ட்டில் ஜாமீன் பெற்றுள்ளார்“ என்று வாதாடினார்கள்.
முடிவில், இந்த மனுக்களை தள்ளுபடி செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த மோசடி குறித்து விசாரிக்க சி.பி.ஐ. போலீசாரை தாமான முன்வந்து எதிர்மனுதாரராக சேர்ப்பதாகவும், சி.பி.ஐ. போலீசார் இந்த வழக்கை விசாரித்து உரிய நடவடிக்கை வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.