திருப்பூரில் சோக சம்பவம்: காதலனுடன் ஏற்பட்ட தகராறால் பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலை

திருப்பூரில் காதலனுடன் ஏற்பட்ட தகராறில் பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 4 மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் பெண் போலீசின் இந்த விபரீத முடிவு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-05-03 23:30 GMT
நல்லூர்,

ஈரோடு வெண்டிபாளையம் லட்சுமிநகர் 2-வது வீதியை சேர்ந்தவர் முகமது இப்ராகிம். இவருடைய மனைவி மாபூநிஷா. இவர்களுடைய மகன் சவுகத் அலி, மகள் பர்வீன் பாபி (வயது 23). இவர் 2017-ம் ஆண்டு போலீஸ் வேலைக்கு தேர்வானார். அதன்பின்னர் பயிற்சி முடிந்ததும் திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்குள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.

அதன் பின்னர் திருப்பூர் முதலிபாளையம் பிரிவு அங்காளபரமேஸ்வரி நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கிருந்து வேலைக்கு சென்று வந்தார். இதற்கிடையில் பர்வீன் பாபி கடந்த 6 மாதமாக தன்னுடன் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவருடைய காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தது. காதலர்கள் இவரும் ஒரே மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டாரின் பெற்றோரும் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இதனால் பர்வீன் பாபி குடியிருக்கும் வீட்டிற்கு அவருடைய காதலர் அடிக்கடி வந்து சென்றார். மேலும் பர்வீன் பாபியை அவருடைய காதலர் தினமும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு கொண்டு விடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதையடுத்து இவர்களின் திருமணத்தை வெகுவிமரிசையாக நடத்த பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி இவர்களின் திருமணம் இன்னும் 4 மாதத்தில் நடைபெற இருந்தது. இதற்கிடையில் பர்வீன் பாபி தனது காதலனை “வாடா போடா” என்று செல்போனிலும், போலீஸ் அதிகாரிகள் முன்னிலையிலும் அழைத்ததாக கூறப்படுகிறது. இது அவர்களுக்குள் மனஸ்தாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாபூநிஷா அங்காளபரமேஸ்வரி நகருக்கு வந்து மகளுக்கு உதவியாக இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பர்வீன் பாபியின் வீட்டிற்கு அவருடைய காதலர் வந்தார். அப்போது வீட்டில் இருந்த மாபூநிஷாவிடம் பர்வீன் பாபியின் காதலர் “ உங்கள் மகள் என்னை போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் மரியாதை குறைவாக பேசுகிறார். அவரை மரியாதையாக பேச அறிவுரை சொல்லுங்கள்” என்று கூறியுள்ளார்.

அப்போது அங்கு வந்த பர்வீன் பாபிக்கும், அவருடைய காதலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடைய காதலர் கோபித்து கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று விட்டார். இதனால் மனவேதனை அடைந்த பர்வீன் பாபி வீட்டிற்குள் சென்றார். அப்போது வீட்டில் இருந்த தாயாரும், காதலருக்கு ஆதரவாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் மாபூநிஷா மருதாணி இலை பறிக்க வெளியில் சென்று விட்டார்.

இதனால் மனம் வெறுப் படைந்த பர்வீன் பாபி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்தார். சிறிதுநேரத்தில் தான் விஷம் குடித்த விவரத்தை தாயாரிடம் தெரிவித்தார். அதற்குள் அவர் திடீரென்று அங்கேயே மயங்கி விழுந்தார். உடனே அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பர்வீன் பாபியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து திருப்பூர் ஊரக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று பர்வீன் பாபியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை அறைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலர் கோபித்து சென்றதால் மனம் உடைந்த பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்