ஈரோட்டில் அரசு ஊழியர் வீட்டில் 13½ பவுன் நகை– ரூ.2 லட்சம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

ஈரோட்டில் அரசு ஊழியர் வீட்டில் 13½ பவுன் நகை, ரூ.2 லட்சத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-05-03 23:15 GMT

ஈரோடு,

ஈரோடு மூலப்பாளையம் பாரதிநகர் 3–வது தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 44). இவர் நெடுஞ்சாலைத்துறையில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி வசந்தா (40). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் சரவணன் தனது குடும்பத்துடன் கடந்த 30–ந் தேதி கேரள மாநிலத்துக்கு சுற்றுலா சென்றார். பின்னர் அவர்கள் நேற்று அதிகாலை வீட்டுக்கு திரும்பினர்.

அப்போது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைப்பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த சரவணன் உள்ளே சென்று பார்த்தார். வீட்டின் உள்ளே பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும், பீரோவின் கதவும் திறக்கப்பட்டு துணிகள் கீழே கிடந்தன. பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 13½ பவுன் நகையும், ரூ.2 லட்சமும் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

இதுபற்றி சரவணன் ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், சரவணன் குடும்பத்துடன் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு மேஜையின் மீது வைக்கப்பட்டு இருந்த சாவியை எடுத்த அவர்கள் பீரோவின் கதவை திறந்து உள்ளனர். பின்னர் அதில் இருந்த நகையையும், பணத்தையும் திருடி சென்றது தெரியவந்தது. கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.

இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனின் வீட்டில் நகை, பணத்தை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்