திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி, வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் டி.ஜி.வினய் ஆய்வு செய்தார்.

Update: 2019-05-03 22:15 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி, இடைத்தேர்தல் நடந்த நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள், திண்டுக்கல் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் எண்ணப்பட உள்ளன. இதற்காக நாடாளுமன்ற தேர்தல், நிலக்கோட்டை இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான டி.ஜி.வினய் நேற்று வாக்கு எண்ணும் மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 7 அறைகளில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. அந்த அறைகளில் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளதை, வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் கலெக்டர் பார்வையிட்டார்.

அதேபோல் வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஆய்வு செய்தார். இதுகுறித்து கலெக்டர் டி.ஜி.வினய் கூறியதாவது:-

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி, இடைத்தேர்தல் நடந்த நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இதனை தினந்தோறும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பார்வையிட்டு பதிவேடுகளில் கையெழுத்திட்டு வருகின்றனர்.

இதனை வேட்பாளர்களின் முகவர்கள் கண்காணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையத்தில் 73 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும் துணை ராணுவத்தினர் உள்பட 202 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்