வேடசந்தூர் அருகே, ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதி
வேடசந்தூர் அருகே ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
வேடசந்தூர்,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கோவிலூர் வழியாக திண்டுக்கல்-கரூர் ரெயில் பாதை செல்கிறது. இந்த வழியாக தினமும் 30-க்கும் மேற்பட்ட ரெயில்கள் சென்று வருகின்றன. இதில் ஆளில்லாத ரெயில்வே கேட் பகுதியில் ரெயில்வே நிர்வாகம் சார்பில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
அதன்படி கோவிலூர் குமரன்நகர் அருகே ஆர்.புதுக்கோட்டை செல்லும் சாலையில் ரெயில்வே பாதைக்கு கீழே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வந்தது. பாதியளவு பணிகள் முடிந்த நிலையில் திடீரென பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக பணி நடைபெறவில்லை.
மேலும் மேற்கூரை அமைக்கப்படாமல் சுரங்கப்பாதை மண் சாலையாக உள்ளது. மழை பெய்யும்பொழுது சுரங்கப்பாதைக்கு கீழ் பகுதியில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இந்த வழியாக செல்லும் கருதனம்பட்டி, ஆர்.புதுக்கோட்டை, ஆர்.பி.பில்லமநாயக்கன்பட்டி, ஆர்.பி.பள்ளப்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுரங்கப்பாதையை கடந்து செல்லமுடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து ரெயில்வே நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ரெயில்வே சுரங்கப்பாதை பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.