மாவட்டத்தில், பலத்த காற்றுக்கு கிழிந்த வாழை இலைகள் - விவசாயிகள் கவலை

மாவட்டத்தில் கடுமையான வறட்சிக்கு இடையே வாழை சாகுபடி செய்து இருந்த நிலையில், பலத்த காற்றால் வாழை இலைகள் கிழிந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Update: 2019-05-03 22:30 GMT
தேனி,

தேனி மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை சாகுபடி நடந்து வருகிறது. பெரியகுளம், தேனி, சீலையம்பட்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் உள்பட பல்வேறு இடங்களில் வாழை சாகுபடி நடக்கிறது. கடந்த ஆண்டு தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கைகொடுத்த அளவுக்கு, வடகிழக்கு பருவமழை கைகொடுக்கவில்லை. வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால் 2-ம் போக நெல் சாகுபடி பாதிக்கப்பட்டது. அத்துடன் வாழை, கரும்பு சாகுபடியும் பாதிக்கப்பட்டது.

கடுமையான வறட்சிக்கு இடையே கிணற்று பாசனம், ஆழ்துளை கிணற்று பாசனம் மூலம் வாழை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர். வாழை சாகுபடியை பொறுத்தவரை வாழைக்காய், வாழைப்பழங்களை போன்று, வாழை இலைகளும் விவசாயிகளுக்கு வருவாய் ஈட்டிக் கொடுக்கிறது.

மேலும் மார்க்கெட்டில் வாழைப்பழங்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை என்றாலும், வாழை இலை மூலம் விவசாயிகள் வருவாய் ஈட்டி நஷ்டம் அடைவதில் இருந்து தப்பித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக தேனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. இருந்த போதிலும் கிணற்று பாசனம், ஆழ்துளை கிணற்று பாசனம் மூலம் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயிகள் வாழை சாகுபடியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. இதனால், தேனி, சின்னமனூர், கம்பம், பெரியகுளம், உத்தமபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள வாழைத்தோட்டங்களில் வளர்க்கப்பட்டு வரும் வாழைமரங்களின் இலைகள் காற்றுக்கு கிழிந்து வருகின்றன. பல இடங்களில் இலைகள் முற்றிலும் கிழிந்து விட்டதால் அவற்றை பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சந்தைகளிலும் வாழை இலைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. தற்போது வாழை இலை ஒரு மடி ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த சில நாட்களில் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்