விக்கிரமசிங்கபுரம் பகுதியில் தொடர் திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது 17 பவுன் நகை மீட்பு
விக்கிரமசிங்கபுரம் பகுதியில் தொடர் திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
விக்கிரமசிங்கபுரம்,
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மர்மநபர்கள் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் உத்தரவின்பேரில், அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாகீர்உசேன் ஆலோசனைப்படி இன்ஸ்பெக்டர்கள் ராஜகுமாரி (விக்கிரமசிங்கபுரம்), மன்னவன் (அம்பை) ஆகியோர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெகன், விஜய் சண்முகநாதன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் வாகன சோதனை நடத்தி சந்தேக நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர். தொடர் திருட்டு தொடர்பாக கோவில்குளத்தை சேர்ந்த ஆறுமுகக்குட்டி மகன் மகேஷ் என்ற மாயாண்டி (வயது 19), ராதாபுரம் அருகே உள்ள பட்டர்குளம் தெற்கு தெருவை சேர்ந்த பேரின்பம் மகன் பார்த்திபன் (20) ஆகியோரை ஏற்கனவே கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.
மேலும் இந்த வழக்கில் திருட்டு நகைகளை வாங்கியதாக அம்பை அப்பர் தெருவை சேர்ந்த திருப்பதி என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 17 பவுன் நகை மீட்கப்பட்டது. மேலும் 3 மோட்டார் சைக்கிள்கள், அரிவாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் அவர்களை விக்கிரமசிங்கபுரம் போலீசார் அம்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மேலும் திருட்டுக்கு உடந்தையாக இருந்த மகேஷின் தந்தை ஆறுமுகக்குட்டியை தேடி வருகின்றனர். கொள்ளையர்களை பிடித்த தலைமை ஏட்டுகள் வீரகணேஷ் (அம்பை), விவேகானந்தன் முத்துசாமி (கடையம்) ஆகியோருக்கு அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாகிர் உசேன் பரிசு வழங்கி பாராட்டினார்.