உத்திரமேரூர் அருகே மாயமான பெண் கிணற்றில் பிணமாக மீட்பு கொலையா? போலீசார் விசாரணை

உத்திரமேரூர் அருகே மாயமான பெண் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-05-03 23:15 GMT
உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்துள்ளது மானாமதி. இங்கு வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 40). இவரது மனைவி விமலா (37). இவர் நேற்று முன்தினம் மாயமானார். இதுகுறித்து பெருநகர் போலீசில் அவரது கணவர் பாலமுருகன் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்தநிலையில் அங்குள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் பெண் பிணம் மிதப்பதாக பெருநகர் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உத்திரமேரூர் தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் அந்த பெண்ணின் உடலை மீட்டனர்.

விசாரணையில் அந்த பெண் மாயமான விமலா என்பது தெரியவந்தது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு யாரேனும் அவரை கொலை செய்து கிணற்றில் வீசினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். விமலாவுக்கு வைசாலி (11), இந்து (8) என்ற 2 மகள்கள் உள்ளனர்.

மேலும் செய்திகள்