என்ஜினீயரிங் சேர்க்கைக்காக செயல்படும் சேவை மையத்தை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் கலெக்டர் பேச்சு

என்ஜினீயரிங் சேர்க்கைக்காக செயல்படுத்தப்படும் சேவை மையத்தை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் உமாமகேஸ்வரி கூறினார்.

Update: 2019-05-03 22:30 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் செயல்பட்டு வரும் என்ஜினீயரிங் சேர்க்கைக்கான மாவட்ட சேவை மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது;-

தமிழகத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கு 2019-ம் ஆண்டிற்கு மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு உயர்கல்வி துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் சார்பில் நடத்தப்படுகிறது. அந்த வகையில் என்ஜினீயரிங் சேர்க்கைக்கான புதுக்கோட்டை மாவட்ட சேவை மையமாக அறந்தாங்கி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

இந்த சேவை மையத்தில் ஆன்லைன் விண்ணப்பங்கள் பதிவு (பதிவு கட்டணம் செலுத்தி) சேவை விலையில்லாமல் நேற்று முன்தினம் முதல் வருகிற 31-ந் தேதி வரையில் நடக்கிறது. அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணிகள் வருகிற ஜூன் மாதம் 6-ந் தேதி முதல் 11-ந் தேதி வரையிலும், பொது கலந்தாய்வு பணிகள் வருகிற ஜூலை மாதம் 3-ந் தேதி முதல் 28-ந் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. மாணவர்கள் என்ஜினீயரிங் சேர்க்கைக்கான கலந்தாய்வில் எளிதில் கலந்து கொள்ளும் வகையில் அறந்தாங்கி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிக்கு கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்.

மேலும் தடையில்லா மின் வினியோகம் வழங்கவும், சுகாதாரத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் பிற மாணவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தவும், காவல்துறையின் சார்பில் போதுமான போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மாணவ, மாணவிகள் என்ஜினீயரிங் சேர்க்கைக்காக விலையில்லாமல் செயல்படுத்தப்படும் சேவை மையத்தை உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிவக்குமாரி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா, அறந்தாங்கி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் முகம்மது பரூக் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்