வேடசந்தூர் அருகே அ.தி.மு.க. பிரமுகரின் கார் தீப்பிடித்து எரிந்தது டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

வேடசந்தூர் அருகே அ.தி.மு.க. பிரமுகரின் கார் தீப்பிடித்து எரிந்து நாசமானது. டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Update: 2019-05-02 23:15 GMT
வேடசந்தூர்,

திண்டுக்கல் அருகே உள்ள சென்னமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவர் அ.தி.மு.க.வில் இளைஞர் பாசறை மாவட்ட செயலாளராக உள்ளார். இவர், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக தனது ஆதரவாளர்களுடன் அங்கு தங்கியுள்ளார்.

இந்தநிலையில் தேர்தல் பணிக்காக சென்னமநாயக்கன்பட்டியில் உள்ள தனது காரை எடுத்து வரச்சொல்லி டிரைவரிடம் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார். இதையடுத்து நேற்று மதியம் திண்டுக்கல் கவடக்கார தெருவை சேர்ந்த டிரைவர் ராஜ்மோகன் (வயது 41) காரை எடுத்துகொண்டு அரவக்குறிச்சிக்கு சென்று கொண்டிருந்தார்.

திண்டுக்கல்-கரூர் 4 வழிச்சாலையில் வேடசந்தூரை அடுத்த மினுக்கம்பட்டி பிரிவை கடந்து கார் சென்றபோது திடீரென காரின் என்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து குபுகுபுவென எரிந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜ்மோகன் சாலை யோரத்தில் காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கினார். அவர் இறங்கிய சிறிது நேரத்தில் கார் தீப்பற்றி எரிந்தது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வேடசந்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தண்ணீரை பீய்ச்சி அடித்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இருந்தபோதிலும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. டிரைவர் உடனடியாக காரை நிறுத்தி கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் காரணமாக திண்டுக்கல்-கரூர் 4 வழிச்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்