திருப்புவனம் பகுதியில், வாழைகளை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகள்
திருப்புவனம் பகுதியில் வாழைகளை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளால் நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் கவலையுடன் கூறினர்.
திருப்புவனம்,
திருப்புவனம் யூனியனைச் சேர்ந்தது தட்டான்குளம், கழுகேர்கடை கிராமங்கள். இந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் திருப்புவனம் கண்மாய் வடக்கு பகுதி மற்றும் மேற்கு பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த பகுதியில் சுமார் 100 ஏக்கருக்கும் மேல் வாழை விவசாயம் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் காட்டுப்பன்றிகளின் தொல்லையால் வாழைகள் கடும் சேதமாகிவிட்டன. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- தற்போது வறட்சியான நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு வாழை நடவு செய்து, விவசாயம் செய்து வாழை நன்கு வளர்ந்து காய் காய்க்கும் பருவத்தில் உள்ளது. மேலும் வாழை அறுவடை செய்யும் தருணத்தில் காட்டுப்பன்றிகளின் அட்டகாசத்தில் வாழை சேதமாகி உள்ளது.
திருப்புவனம் கண்மாய் சுமார் 300 ஏக்கருக்கு மேல் நிலப்பரப்பு கொண்ட பகுதியாகும். இந்த கண்மாயில் தற்போது முட்கள் அடர்ந்த நிலையில் புதர்கள் மண்டி காணப்பட்டு வருகிறது. இந்த முட்புதர்களில் காட்டு பன்றிகள், மான்கள் அதிகமாக உள்ளன. இந்த காட்டு பன்றிகள் இரவு நேரத்தில் முட்புதர்களை விட்டு வெளியே வந்து, வளர்ந்த நிலையில் உள்ள வாழைகளை சாய்த்து விட்டு செல்கின்றன.
மேலும் சாய்ந்த வாழையில் இருந்து வாழைக்காய்களை தின்று விட்டு செல்கின்றன. இதையடுத்து முதல் நாள் வாழைத்தார்களுடன் காட்சியளிக்கும் இந்த வாழைகள், மறுநாள் பார்க்கும் போது, காட்டு பன்றிகளால் சேதமாக்கப்பட்டு தரையில் சாய்ந்து கிடக்கும் நிலையை பார்த்து உழைப்பு முழுவதும் வீணாகிவிட்டதே என்ற கவலை அளிக்கிறது.
இதேபோல புதர்பகுதியில் உள்ள மான்கள் இரவு நேரங்களில் வெளியே வந்து, இந்த பகுதியில் உள்ள சிறிய வாழைக்கன்றுகளை சாய்த்து, அதன் நடுவில் உள்ள குருத்துகளை தின்று விட்டு செல்கின்றன.
இதனால் அதிக செலவு செய்து பராமரித்த வாழையில் இருந்து எவ்வித லாபத்தையும் பெறமுடியாமல் வேதனையளிக்கிறது.
ஒரு ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் வரை செலவு செய்து வளர்த்த வாழைகளை அறுவடை செய்யும் நேரத்தில், காட்டு பன்றிகள் அதை சேதப்படுத்தி சென்றுவிடுகின்றன. இதற்கு முன்பு பலத்த காற்றால் வாழையை காப்பாற்ற மிகவும் சிரமம் அடைந்தோம். தற்போது காட்டு பன்றிகளால் வாழையில் உள்ள இலை, காய், மரம் ஆகியவை முற்றிலும் சேதமடைந்து விட்டன.
ஒரு காட்டு பன்றி சுமார் 200 கிலோ எடை கொண்டதாகவும், நீளமாக இருப்பதால் உயந்த நிலையில் உள்ள வாழைகள் மேல் தாவி, வாழையை முறித்து விடுகிறது. மேலும் காவல் காக்க செல்லும் போது, காட்டுப்பன்றிகள் விரட்டி துரத்தி தாக்க வருவதால், நாங்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடும் அவல நிலை உள்ளது. இவைகள் பகலில் முட்புதர் பகுதிகளில் மறைந்து விடுவதால் அவற்றை விரட்டுவது கடுமையான காரியமாக உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு காட்டுப்பன்றி தொல்லைகளை கட்டுப்படுத்த வேண்டும். சேதமடைந்த வாழைகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.