கன்னியாகுமரியில் கடல் சீற்றம்; படகு போக்குவரத்து நிறுத்தம்

கன்னியாகுமரியில் நேற்று கடல் சீற்றமாக இருந்ததால் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

Update: 2019-05-02 23:00 GMT
கன்னியாகுமரி,

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். தற்போது கோடை விடுமுறையையொட்டி கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்தையும், திருவள்ளுவர் சிலையையும் படகில் சென்று பார்வையிட்டு மகிழ்வார்கள். இவர்களின் வசதிக்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு வழக்கம் போல் படகு போக்குவரத்து தொடங்கியது. சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து படகில் சென்றனர். காலை 10.30 மணியளவில் திடீரென கடலில் சூறாவளி காற்றுடன் கடல் சீற்றம் ஏற்பட்டது. ராட்சத அலைகள் எழுந்து கரையை நோக்கி வந்தன.

இதனால், விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அத்துடன் ஏற்கனவே அழைத்து செல்லப்பட்டவர்கள் அவசரம் அவசரமாக அழைத்து வரப்பட்டனர். திருவள்ளுவர் சிலைக்கு நேற்று முழுவதும் படகு போக்குவரத்து நடைபெறவில்லை.

கடல் சீற்றம் ஏற்பட்டதால் கடலில் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அவசரமாக கரை ஏறினர். மேலும், கடலோர பாதுகாப்பு படை போலீசார் கடற்கரை பகுதியில் ரோந்து சென்று யாரும் கடலில் இறங்காதவாறு கண்காணித்தனர்.

மேலும் செய்திகள்