கோயம்பேடு மார்க்கெட்டில் எத்திலீன் வைத்து பழங்களை பழுக்க வைக்கும் முறை வியாபாரிகளுக்கு அதிகாரிகள் விளக்கம்

கோயம்பேடு மார்க்கெட்டில் எத்திலீன் வைத்து பழங்களை பழுக்க வைக்கும் முறை குறித்து வியாபாரிகளுக்கு அதிகாரிகள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

Update: 2019-05-01 23:00 GMT

பூந்தமல்லி,

கோடை காலம் தொடங்கியதையடுத்து கோயம்பேடு மார்க்கெட்டில் பழங்களின் வருகையும், விற்பனையும் கோடை வெயிலை காட்டிலும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. சிலர் அதிகமாக பழங்களை விற்பனை செய்யவேண்டும் என்பதற்காக கார்பைடு என்னும் ரசாயன கற்களை வைத்து பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்து வந்தனர்.

இதனால் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அடிக்கடி கோயம்பேடு பழ மார்க்கெட்டில் சோதனை செய்து அந்த பழங்கள் மற்றும் கார்பைடு கற்களையும் பறிமுதல் செய்து வந்தனர்.

இந்த நிலையில் எத்திலீன் பவுடர் மூலம் பழங்களை பழுக்க வைக்கும் முறை குறித்து கோயம்பேடு பழ மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் செயல் முறை விளக்கம் அளித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:–

கார்பைடு கற்கள் மூலம் பழங்கள் பழுக்க வைப்பதால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். நோய்கள் வரும். இதன் மூலம் பழுக்க வைக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. எத்திலீன் பவுடரை ஒரு டப்பாவில் அடைத்து, தண்ணீரில் ஊறவைத்து 10 கிலோ எடைகொண்ட பழங்களுக்கு மத்தியில் வைக்கப்பட்டு அந்த அறை மூடப்படும். இதன் மூலம் சுமார் 24 மணி நேரத்தில் பழங்கள் பழுக்க ஆரம்பித்துவிடும்.

இவ்வாறு பழங்கள் பழுக்க வைக்கப்படுவதால் உடலுக்கு எந்தவித தீங்கும் கிடையாது. பொதுவாக பழங்கள் பழுக்க அசிட்டிலீன் என்னும் வாயு பயன்படும். இந்த எத்திலீன் பயன்படுத்துவதால் அசிட்டிலீன் வாயு உருவாகும் என்பதால் எந்த பாதிப்பும் இருக்காது. உணவு பாதுகாப்பு துறை மூலம் இந்த செய்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து கார்பைடு கற்கள் மூலம் பழங்களை பழுக்க வைக்கும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்