துரையரசபுரம் கூட்டுறவு நூற்பாலையில் தீ விபத்து பல லட்சம் ரூபாய் நூல்கோன்கள், பஞ்சு எரிந்து நாசம்

துரையரசபுரம் கூட்டுறவு நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நூல்கோன்கள், பஞ்சு எரிந்து நாசமாகின.

Update: 2019-05-01 23:00 GMT
ஆவுடையார்கோவில்,

ஆவுடையார்கோவில் அருகே அறந்தாங்கி துரையரசபுரத்தில் கூட்டுறவு நூற்பாலை உள்ளது. இந்த நூற்பாலையில் 450-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர். நேற்று தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நூற்பாலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்து. விடுமுறையை முன்னிட்டு ஆலை மூடப்பட்டிருந்த நிலையில், நுழைவு வாயிலில் காவலாளிகள் மட்டும் பணியில் இருந்துள்ளனர். இந்நிலையில் ஆலையில் உள்ள பஞ்சு குடோனில் திடீரென தீப்பிடித்து புகை வெளிவந்துள்ளது. இதையடுத்து அங்கு பணியில் இருந்த காவலாளிகள் அறந்தாங்கி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து கொழுந்து விட்டு எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்க முயற்சித்தனர். ஆனால் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

இதையடுத்து அவர்கள் ஆவுடையார்கோவில், கீரமங்கலம் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். மேலும் மற்ற இடங்களில் தீ பரவாமல் தடுத்தனர். இந்த தீ விபத்தில் நூற்பாலையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நூல்கோன்கள், பஞ்சு தீயில் எரிந்து நாசமாகின.

தொழிலாளர் தின விடுமுறையை முன்னிட்டு தொழிலாளர்கள் வேலைக்கு வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து ஆவுடையார்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்