விளையாட்டு விடுதியில் சேர மாணவ –மாணவிகள் விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்

விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ–மாணவிகள் வருகிற 7–ந் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-01 22:30 GMT

சிவகங்கை,

ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:– தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2019–20–ம் ஆண்டிற்கு விளையாட்டு விடுதியில் 7, 8, 9, மற்றும் 11–ம் வகுப்புகளுக்கு மாணவர்கள் மற்றும் மாணவிகள் சேர்க்கை நடைபெறவுள்ளது.

7–ம் வகுப்பில் சேர 1.1.2006 அன்றோ அதற்கு பின்னரோ பிறந்தவராக இருத்தல் வேண்டும். 8–ம் வகுப்பில் சேர 1.1.2005 அன்றோ அதற்கு பின்னரோ பிறந்தவராக இருத்தல் வேண்டும். 9–ம் வகுப்பிற்கு 1.1.2003 அன்றோ அதற்கு பின்னரோ பிறந்தவராகவும், 11–ம் வகுப்பிற்கு 1.1.2002 அன்றோ அதற்கு பின்னரோ பிறந்தவராக இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் விளையாட்டு ஆணைய இணைய தளத்தில் வருகிற 7–ந் தேதி மாலை 5 மணிக்குள் உரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தர வேண்டும்.

அத்துடன் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கையெழுத்து, பிறப்பு, சாதி சான்றிதழ்கள், ஆதார் அட்டை, விளையாட்டு சான்றிதழ், பள்ளியில் படிப்பதற்கான சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் ஆவணங்களை ஸ்கேன் செய்து இணையத்தில் ஏற்ற வேண்டும்.

விளையாட்டு விடுதிக்கு தேர்ந்தெடுக்கப்படுகிற வீரர், வீராங்கணைகளுக்கு நாள் ஒன்றிற்கு ரூ.250–க்கான உணவு மற்றும் தங்குமிடம் விளையாட்டுச் சீருடை, விளையாட்டுப் பயிற்சி ஆகியவை அரசால் வழங்கப்படும்.

கல்வி சம்பந்தப்பட்ட கட்டணங்களை மாணவர்களின் பெற்றோர்கள் ஏற்க வேண்டும். விடுதியில் சேருவதற்கு மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் வருகிற 9–ந்தேதி மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.

மாவட்ட அளவிலான தேர்வில் மட்டும் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் மட்டும் மாநில அளவிலான தேர்வு போட்டிகளில் பங்கேற்க முடியும். மாநில அளவிலான தேர்வு முடிவுற்ற பின் தகுதி பெறுவோரின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும். அவர்கள் மாநில அளவிலான கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு உரிய விளையாட்டு விடுதிக்கு ஒதுக்கீடு செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்