மனைவியை பெற்றோர் வீட்டில் தவிக்க விட்டு சொகுசு கார், கைக்குழந்தையுடன் என்ஜினீயர் தலைமறைவு போலீசார் வழக்கு

மனைவியை பெற்றோர் வீட்டில் தவிக்க விட்டு, சொகுசு கார்-கைக்குழந்தையுடன் தலைமறைவான பெங்களூரு என்ஜினீயரை திருச்சி அனைத்து மகளிர் போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2019-04-30 22:15 GMT
திருச்சி,

திருச்சி குமரன்நகர் ராசிநிவாஸ் 19-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சிவரஞ்சனி(வயது32). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், தற்போது பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். சிவரஞ்சனிக்கும், ஈரோட்டை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ராஜேஷ் என்பவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகு இத்தம்பதியினர் அமெரிக்கா மற்றும் பெங்களூருவில் வசித்து வந்தனர். சிவரஞ்சனிக்கு பெங்களூருவில் நிரந்தர வேலை என்பதால், இறுதியாக கணவர் ராஜேசுடன் பெங்களூருவில் வசித்து வந்தார். இவர்களுக்கு 1¼ வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

கடந்த சில மாதங்களாக ராஜேஷ் வேலை இல்லாமல் இருந்துள்ளார். எனவே, மனைவியின் சம்பளத்தை எதிர்பார்த்தே குடும்பம் ஓட்டி வந்த ராஜேஷ், அடிக்கடி மனைவியுடன் சண்டை போட்டு வந்துள்ளார். மேலும் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 21-ந் தேதி ராஜேஷ் தனது மனைவியிடம், திருச்சி சென்று அங்குள்ள கோவில்களில் வழிபாடு செய்து வரலாம் என்று கூறியுள்ளார். அவரும் உடனே சரி எனக்கூறி, கைக்குழந்தையுடன் திருச்சி புறப்பட்டார். சிவரஞ்சனிக்கு சொந்தமான விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்று உள்ளது. அந்த காரில் கைக்குழந்தையுடன் இருவரும் திருச்சி புறப்பட்டனர்.

திருச்சி வந்ததும், சிவரஞ்சனியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டு, விட்டு தான் வெளியில் சென்று வருவதாக ராஜேஷ் புறப்பட்டார். சிறிது நேரத்தில் கைக்குழந்தையுடன், சிவரஞ்சனி நிறுவனத்திற்கு சொந்தமான லேப்டாப் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணத்துடன் சொகுசு காரை எடுத்து கொண்டு ராஜேஷ் தலைமறைவானார்.

கணவர் ராஜேஷ், குழந்தையுடன் திரும்பி காரில் வந்து விடுவார் என எதிர்பார்த்த சிவரஞ்சனிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தன்னை ஏமாற்றி விட்டு தலைமறைவான கணவர் குறித்து திருச்சி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில், வரதட்சணை கொடுமை, மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் ராஜேஷ் மீது ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார். 

மேலும் செய்திகள்