எம்.ஆர்.பட்டினத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத அரசு பள்ளி

எம்.ஆர்.பட்டினத்தில் அரசு பள்ளி அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் உள்ளது.

Update: 2019-04-29 22:30 GMT

தொண்டி,

திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ள எம்.ஆர்.பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கடந்த 1939–ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பள்ளி கடந்த 2008–09–ம் கல்வி ஆண்டில் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இப்பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டன. தற்போது 110–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகளுடன் நல்ல கல்வி தரத்துடன் இப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஆனால் இப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் வசதியில்லாததால் பள்ளி வளாகத்திற்குள் ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகள் நுழைந்து குழந்தைகளை அச்சுறுத்தி வருவதுடன் பள்ளி வளாகத்தை அசுத்தம் செய்து விடுகின்றன. இதனால் பள்ளி வளாகத்தில் சுகாதாரக்கேடுகள் ஏற்பட காரணமாகி விடுகிறது. மேலும் மாணவ–மாணவிகளுக்கு பாதுகாப்பு குறைபாடாக இருந்து வருகிறது. இங்கு 4 பள்ளிக்கட்டிடங்கள் உள்ள நிலையில் 2 கட்டிடங்கள் பழுதடைந்து விட்டதால் பயன்பாடின்றி காட்சி பொருளாகவே இருந்து வருகிறது.

2 கட்டிடங்களில் தான் எல்.கே.ஜி. முதல் 8–ம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. போதிய இடவசதியில்லாத நிலையில் நெருக்கடியான சூழலில் மாணவர்கள் அமர்ந்து படிக்க வேண்டிய நிலையில் பள்ளி இயங்கி வருகிறது. மேலும் இரண்டு வகுப்பறை கட்டிடம் ஆங்காங்கே உடைந்து சேதமடைந்து கிடக்கிறது. இதேபோல் புதிய பள்ளி கட்டிடத்தில் மாணவர்கள் ஏறிச்செல்ல ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள சாய்வு தளம் சேதமடைந்து நீண்டநாட்களாக சீரமைக்கப்படாமல் இருந்து வருவதால் பள்ளி குழந்தைகள் ஒருவித பயத்துடன் சாய்வு தளத்தில் சென்று வருகின்றனர். மேலும் இப்பள்ளி வளாகத்தில் பயன்பாடு இல்லாத தரைமட்ட கிணறு உள்ளது. இந்த கிணறு பாதுகாப்பு இல்லாத நிலையில் இருந்து வருவதை யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பதால் பள்ளி குழந்தைகளுக்கு எந்த நேரத்திலும் பெரும் ஆபத்தை உருவாக்க காத்திருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. இதுபோன்ற அடிப்படை கட்டமைப்பு வசதி குறைபாடுகள் உடனடியாக சரி செய்யப்பட வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையும் எதிர்பார்ப்பாகவும் இருந்து வருகிறது.

இதுகுறித்து முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் காளிதாஸ் கூறியதாவது:– சுமார் 80 ஆண்டு பழமையான இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர், கூடுதல் பள்ளிக்கட்டிடம், போதிய குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் இப்பள்ளியின் வளர்ச்சி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் இப்பள்ளிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்துதர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல இப்பள்ளியை விரைவில் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்