நுகர்பொருள் வாணிபக்கழக சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்

நுகர்பொருள் வாணிபக் கழக சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2019-04-29 22:45 GMT
சுந்தரக்கோட்டை,

மன்னார்குடியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் 33-வது ஆண்டு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்க மாநில தலைவர் சாமிக்கண்ணு தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் புண்ணீஸ்வரன் முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் சந்தானம் கொடியேற்றி வைத்தார். வரவு-செலவு அறிக்கையை மாநில பொருளாளர் கோவிந்தராஜன் வாசித்தார். முன்னதாக மாவட்ட செயலாளர் நாகேஷ் வரவேற்றார்.

கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் எம்.செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிவபுண்ணியம், உலகநாதன், மாநில பொதுச்செயலாளர் சந்திரகுமார், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் செல்வராஜ், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சந்திரசேகர ஆசாத் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

நெல் கொள்முதலில் உரிய முன்னேற்பாடுகள் செய்யப்படாததால் விவசாயிகள் மிகுந்த கஷ்டத்தை எதிர்கொள்கின்றனர். மின்னணு பரிவர்த்தனை மூலம் நெல் விற்பனை தொகை பட்டுவாடா செய்வதில் விவசாயிகள் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே நெல் கொள்முதலில் சாக்கு, சேமிப்பு வசதி உள்ளிட்ட முன்னேற்பாடுகள் முறையாக செய்து குறைவின்றி நெல் கொள்முதல் செய்யவும் மின்னணு பரிவர்த்தனையை விரைவுபடுத்தி விவசாயிகளுக்கு உடனுக்குடன் பணப்பட்டுவாடா செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி திட்டம் செயல்படுத்த வேண்டும்.

சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். சுமை தூக்கும் தொழிலாளர் களுக்கு கூலி உடனுக்குடன் வழங்குவதற்கு நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும். சுமை தூக்கும் தொழிலாளர்கள் இழப்பு ஏற்பட்டால் அரசு பணியாளர்களுக்கு வழங்குவது போல் குடும்ப நல நிதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முடிவில் மாநில செயலாளர் கலிய பெருமாள் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்