ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் மோகன் வேட்புமனு தாக்கல்

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் மோகன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

Update: 2019-04-29 23:00 GMT
ஓட்டப்பிடாரம்,

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ந் தேதி தொடங்கியது. மனு தாக்கல் செய்வதற்கு நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் மோகன் போட்டியிடுகிறார். அவர் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

ஓட்டப்பிடாரத்தில் உள்ள உலகாண்டேசுவரி அம்மன் கோவிலில் அம்மன் பாதத்தில் வேட்புமனுவை வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் அமைச்சர்கள் காமராஜ், ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி, வேட்பாளர் மோகன் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் அவர்கள் திறந்த வேனில் நின்றபடி ஊர்வலமாக ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகம் நோக்கி புறப்பட்டனர். அப்போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாகமாக முழக்கம் எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர். ஊர்வலமானது ஓட்டப்பிடாரம் பஜார், வடக்கு பரும்பூர் வழியாக பகல் 12.15 மணிக்கு தாலுகா அலுவலகத்தை வந்தடைந்தது.

அங்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சுகுமாரிடம், அ.தி.மு.க. வேட்பாளர் மோகன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கடம்பூர் ராஜூ, தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ., அமைச்சர் காமராஜ், டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர். மாற்று வேட்பாளராக முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆதிலிங்கம் மனு தாக்கல் செய்தார். ஓட்டப்பிடாரம் சிலோன்காலனி இந்திராநகரை சேர்ந்த சின்னத்துரை என்பவர் வேட்புமனுவை முன்மொழிந்தார். இதில் த.மா.கா. வடக்கு மாவட்ட தலைவர் கதிர்வேல், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் புகழும்பெருமாள், அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார், புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர்கள் செல்லத்துரை, மன்சூர்அலி, கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. வேட்பாளர் மோகன் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளார். ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதனால் மோகன் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. அ.தி.மு.க.வின் கோட்டையாக திகழ்ந்து கொண்டு இருக்கக்கூடிய ஓட்டப்பிடாரம் தொகுதியில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தந்த திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள ஒட்டுமொத்த வாக்காளர்களும் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க தயாராகிவிட்டார்கள். கூட்டணி கட்சிகளும் வலுவாக இருக்கும் பகுதியாக இருப்பதால் வேட்பாளர் மோகன் வெற்றி உறுதியாகி விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்

அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில், ‘வேட்புமனு பரிசீலனைக்கு பிறகு கூட்டணி கட்சி தலைவர்கள் பிரசாரத்துக்கு வர உள்ளனர். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 7, 12-ந் தேதியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 5-ந் தேதியும் பிரசாரம் செய்ய உள்ளனர்.

வ.உ.சி. பிறந்த மண்ணில் கோர்ட்டு அமைக்க அரசு பரிந்துரை செய்து உள்ளது. கொம்பாடி ஓடையில் ஏற்கனவே 3 தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளன. புதியம்புத்தூரில் ஆயத்த ஆடைகள் பூங்கா அமைக்க அரசு பரிசீலித்து வருகிறது. மதுரை முதல் தூத்துக்குடி வரை தொழில் வழித்தடம் அமைக்க 4 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த தொழில் வழித்தடம் அமையும் போது, புதியம்புத்தூருக்கு முன்னுரிமை அளித்து ஆயத்த ஆடைகள் பூங்கா அமைக்கப்படும்’ என்றார்.

மேலும் செய்திகள்