அம்மா உணவகங்களில் இருந்து மளிகை பொருட்களை வெளியே எடுத்து செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மாநகராட்சி ஆணையாளர் உத்தரவு
அம்மா உணவகங்களில் இருந்து மளிகை பொருட்களை வெளியே எடுத்து செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார்.
சேலம்,
சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி ஆகிய 4 மண்டலங்களுக்கு உட்பட்ட 11 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த உணவகங்களில் மலிவு விலையில் இட்லி, சாம்பார் சாதம், தயிர் சாதம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், அம்மா உணவகங்களுக்கு வாங்கப்படும் மளிகை பொருட்களில் பெருமளவு வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுவதாகவும், அதன்மூலம் ஒவ்வொரு உணவகத்திலும் லட்சக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் உத்தரவிட்டார். அதன்பேரில் 4 மண்டலங்களில் உள்ள அம்மா உணவகங்களில் உதவி ஆணையாளர்கள் தலைமையிலான அதிகாரிகள் கணக்கு பதிவேடுகளை ஆய்வு செய்தனர்.
இதுதொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் சதீஷ் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது உணவு பொருட்கள் எவ்வளவு ரூபாய்க்கு வாங்கப்படுகிறது?, அவை முறையாக பயன்படுத்தப்படுகிறதா? அதற்கான பதிவேடுகள் உள்ளதா என கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து அவர் பேசும் போது, 2 மாதங்களுக்கு ஒருமுறை உணவகங்களுக்கு மளிகை பொருட்கள் வாங்குவது, இனிமேல் வாரத்துக்கு ஒருமுறை வாங்க வேண்டும். இந்த பொருட்கள் தினமும் எவ்வளவு பயன்படுத்தப்படுகிறது என்பதை உதவி கமிஷனர்கள், வருவாய் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். உணவகங்களில் உள்ள மளிகை பொருட்களின் இருப்பை தினமும் கண்காணித்து பதிவேட்டில் எழுத வேண்டும். அம்மா உணவகங்களில் இருந்து யாராவது மளிகை பொருட்களை வெளியே எடுத்து செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.