ஊத்துக்கோட்டை அருகே சேதம் அடைந்த கிருஷ்ணா கால்வாய் கரைகள் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ஊத்துக்கோட்டை அருகே சேதம் அடைந்த கிருஷ்ணா கால்வாய் கரைகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-04-29 22:30 GMT
செங்குன்றம்,

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தமிழக அரசு கடந்த 1983-ம் ஆண்டு ஆந்திர அரசுடன் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்ட ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன்படி ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திர அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 8 டி.எம்.சி. தண்ணீரும், ஜூலை முதல் அக்டோபர் வரை 4 டி.எம்.சி. தண்ணீரையும் ஆந்திராவில் உள்ள நெல்லூர் மாவட்டம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறக்க வேண்டும். இதற்காக 1983-ம் ஆண்டு கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரி வரை 177 கிலோமீட்டர் தூரத்துக்கு திறந்தவெளி கால்வாய் வெட்டப்பட்டது.

இதில் ஆந்திராவில் 152 கிலோமீட்டர் தூரத்துக்கும், தமிழகத்தில் தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோமீட்டர் தூரத்துக்கும் கால்வாய் அமைக்கப்பட்டது. 1983-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பணிகள் 1995-ம் ஆண்டு முடிக்கப்பட்டன.

1996-ம் ஆண்டு முதன்முதலாக கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கும்போது கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கரைகள் சேதம் அடையும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதை தடுக்க கடந்த 8 ஆண்டுகளாக இஸ்ரேல் நாட்டு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கரைகளை பலப்படுத்தும் பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

இருப்பினும் கரைகள் சேதம் அடையும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி ஜனவரி முதல் மார்ச் வரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

அப்போது ஊத்துக்கோட்டை அருகே உள்ள தொம்பரம்பேடு, அம்பேத்கர்நகர், சிற்றபாக்கம், அனந்தேரி, போந்தவாக்கம், கரகம்பாக்கம், தேவந்தவாக்கம் உள்பட 25 இடங்களில் கால்வாய் கரை சேதம் அடைந்தது. இவற்றை சீரமைக்கவில்லை என்றால் தண்ணீர் கிராமங்களில் பாயும் அபாயம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு சேதம் அடைந்த கிருஷ்ணா கால்வாய் கரைகளை சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்