திட்டக்குடி அருகே, ஏரிக்கரையில் செத்துக்கிடந்த மான்

திட்டக்குடி ஏரிக்கரையில் மான் ஒன்று செத்துக்கிடந்தது.

Update: 2019-04-29 22:45 GMT
திட்டக்குடி,

சிறுபாக்கத்தில் வனத் துறைக்கு சொந்தமான காப்புக்காடு உள்ளது. இந்த காப்புக்காட்டில் மான்கள் அதிக அளவில் உள்ளன. தற்போது கோடை காலம் என்பதால் மான்கள் குடிநீர் மற்றும் உணவுக்காக அடிக்கடி காப்புக்காட்டில் இருந்து வெளியேறி கிராமப்புறங் களுக்கு வருகிறது.

அவ்வாறு வரும் மான்கள் சில நேரங்களில் வாகன விபத்துகள் மற்றும் விவசாய கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்து விடுகின்றன. இந்த நிலையில் நேற்று திட்டக்குடி அருகே இடைச்செருவாய் வெலிங்டன் ஏரிக்கரையில் உள்ள முட்செடிகளுக்கு இடையே ஆண் மான் ஒன்று செத்துக்கிடந்தது.

இதைபார்த்த அப்பகுதி மக்கள் உடனே வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறை அதிகாரி செல்லபாண்டியன் சம்பவ இடத்துக்கு வந்து செத்துக்கிடந்த மானை பார்வையிட்டார். தண்ணீருக்காக காட்டில் இருந்து வெளியேறிய மான் முட்செடியில் சிக்கி உயிரிழந்து இருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். பின்னர் கால்நடை மருத்துவர் மூலம் மான் உடல்கூறு செய்யப்பட்டு புதைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்