எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு: மாவட்டத்தில் 94.36 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்ட மாணவ, மாணவிகள் 94.36 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி,
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, மத்தூர், ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய 4 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் மொத்தம் 394 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் 88 மையங்களில் இந்த தேர்வை எழுதினார்கள். மாவட்டத்தில் 13 ஆயிரத்து 197 மாணவர்களும், 12 ஆயிரத்து 529 மாணவிகளும் என மொத்தம் 25 ஆயிரத்து 726 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதினார்கள்.
அதில் 12 ஆயிரத்து 204 மாணவர்களும், 12 ஆயிரத்து 72 மாணவிகளும் என மொத்தம் 24 ஆயிரத்து 276 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 92.48 சதவீதம் ஆகும். மாணவிகள் தேர்ச்சி விகிதம் 96.35 சதவீதம் ஆகும். கிருஷ்ணகிரி மாவட்ட மாணவ, மாணவிகள் 94.36 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்டத்தில் மொத்தம் உள்ள 269 அரசு பள்ளிகளில், 97 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. அதே போல 4 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2 பள்ளிகளும், 11 சுய நிதி பள்ளிகளில் 10 சுய நிதி பள்ளிகளும், 110 மெட்ரிக் பள்ளிகளில் 95 பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
மொத்தம் உள்ள 394 பள்ளிகளில், 204 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 94.18 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு 94.36 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.