கும்மிடிப்பூண்டி அருகே பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

கும்மிடிப்பூண்டி அருகே முறையாக இயக்கப்படாத அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-04-29 22:45 GMT
கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே உள்ளது கண்ணங்கோட்டை கிராமம். இந்த கிராமத்தின் வழியே ஊத்துக்கோட்டை அரசு பஸ் பணிமனையில் இருந்து சென்னை மற்றும் மாதர்பாக்கத்திற்கு தினமும் காலை நேரத்தில் அரசு பஸ் இயக்கப்படுவது வழக்கம்.

இந்த பஸ்சால் கண்ணங்கோட்டை, அமரம்பேடு, சிறுவாடா, கரடிபுத்தூர் உள்பட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் மாணவ, மாணவிகளும் பயன் அடைந்து வந்தனர்.

இந்தநிலையில் இந்த பஸ்சை கடந்த ஒரு வாரமாக கண்ணங்கோட்டை வழியாக இயக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளானார்கள்.

இந்தநிலையில் நேற்று காலை 8:30 மணிக்கு மாதர்பாக்கத்தில் இருந்து சென்னை செல்லும் இந்த அரசு பஸ், கண்ணங்கோட்டை கிராமத்திற்கு வந்தது. இதனைக்கண்ட கிராம பொதுமக்கள் மேற்கண்ட அரசு பஸ்சை திடீரென சிறைபிடித்தனர். இந்த போராட்டத்தில் அதிக அளவில் பெண்கள் கலந்து கொண்டனர்.

கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு முறையாக இந்த பஸ்சை இயக்க வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பினர். தகவல் அறிந்து பாதிரிவேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பு, நாராயணன் மற்றும் ஊத்துக்கோட்டை அரசு பஸ் பணிமனை அதிகாரி ஜெயக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இனி, தவறாமல் வழக்கமான வழித்தடத்தில் முறையாக பஸ் இயக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனையடுத்து தங்களது 2 மணி நேர போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்