திருவண்ணாமலையில் கிரானைட் தொழில் அதிபரிடம் ரூ.8½ லட்சம் பறிமுதல் பறக்கும் படையினர் நடவடிக்கை

திருவண்ணாமலையில் கிரானைட் தொழில் அதிபரிடம் இருந்து ரூ.8½ லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-04-29 23:00 GMT

திருவண்ணாமலை, 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பணம் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் கடந்த 18–ந் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், மீண்டும் சோதனை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலை கண்காணிப்பு குழுவினரும், பறக்கும் படையினரும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை அருகே உள்ள கொளக்குடி சந்திப்பில் பறக்கும் படை அதிகாரி ராஜேஷ் தலைமையில், போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி மற்றும் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் உரிய ஆவணமின்றி ரூ.8 லட்சத்து 40 ஆயிரம் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து காரில் இருந்தவரிடம் விசாரணை நடத்தியதில், விருத்தாசலத்தை சேர்ந்த கிரானைட் தொழில் அதிபர் மங்கிலால் (வயது 44) என்பதும், தொழில் சம்பந்தமாக கிருஷ்ணகிரிக்கு செல்வதும் தெரியவந்தது.

இதையடுத்து பறக்கும் படையினர் ரூ.8 லட்சத்து 40 ஆயிரத்தை பறிமுதல் செய்து, திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள கருவூல அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்