வேலை, ஆர்வத்தை நிறைவேற்றும் “ஸ்போர்ட்ஸ் என்ஜினீயரிங்”

இளைய தலைமுறையின் வேலை, ஆர்வத்தை நிறைவேற்றும் “ஸ்போர்ட்ஸ் என்ஜினீயரிங்”

Update: 2019-04-29 04:02 GMT
விளையாட்டுத் துறையுடன் தொடர்புடைய, சிறந்த வேலை வாய்ப்புகளைக் கொண்ட புல்தரை மேலாண்மை (டர்ப் மேனேஜ்மென்ட்) படிப்பு பற்றி ஏற்கனவே பார்த்தோம். அதுபோலவே விளையாட்டு ஆர்வமும், பொறியியல் திறனும் பெற்ற இளைஞர் களுக்கு ஏற்ற மற்றொரு விளையாட்டுக் கல்விதான் ஸ்போர்ட்ஸ் என்ஜினீயரிங். ஏராளமான வாய்ப்புகளை கொண்ட இந்த கல்வியைப் பற்றி சற்று அறிவோம்...

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில் விளையாட்டுத் துறையும் நவீன வளர்ச்சி கண்டுவிட்டது என்று சொல்லலாம். தொழில்நுட்ப கருவிகளால் கணிக்கப்படும் விளையாட்டுகள் துல்லியமான முடிவுகளையும், புள்ளி விவரங்களையும் வழங்குவது விளையாட்டு ரசிகர்களுக்கு ஈர்ப்பை அதிகப்படுத்து கிறது. அதே நேரத்தில் விளையாட்டு வீரர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.

ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டி, தேசிய விளையாட்டுப் போட்டி, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் என விளையாட்டு வீரர்களுக்கு அடுத்தடுத்த விளையாட்டு விருந்துகள் காத்துக் கொண்டிருக்கின்றன.

இந்த விளையாட்டுகளுக்குத் தேவையான தொழில்நுட்பங்களைப் பற்றிய படிப்புதான் ஸ்போர்ட்ஸ் என்ஜினீயரிங். பொறியியல் படிப்பு என்றாலும் வெளிநாடுகளில்தான் இது பொறியியல் துறையுடன் இணைந்த கல்வியாக வழங்கப்படுகிறது. இந்தியாவில் இது பி.எஸ்சி. அறிவியல் படிப்பின் கீழ் வழங்கப்படுகிறது.

விளையாட்டு பற்றியும், அவற்றுக்குத் தேவையான கருவிகள், உபகரண வடிவமைப்பு, விபத்து தடுப்பு சாதனங்கள், துல்லிய ஆட்ட கணிப்பு சாதனங்களை உருவாக்குவதுதான் இந்த படிப்பின் நோக்கம். ஸ்போர்ட்ஸ் ஷூ, ஸ்போர்ட்ஸ் உபகரணங்கள் வடிவமைப்பது, உடலின் பயோமெக்கானிசம், களத்தில் காயம் படுவதை குறைப்பது போன்றவற்றை இந்த கல்வியில் படிக்கலாம். ஸ்போர்ட்ஸ் பைக், கார் வடிவமைப்பு, ஸ்போர்ட்ஸ் சார்ந்த எலக்ட்ரானிக் உபகரணங்கள் தயாரிப்பு போன்றவற்றையும் அறிந்து கொள்ளலாம்.

மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், மெட்டீரியல் சயின்ஸ், பயோமெக்கானிக்கல், பிஸியாலஜி ஆகியவற்றின் கூட்டுக் கலவையாய் பாடங்கள் அமைந்திருக்கும். விளையாட்டு மட்டுமல்லாமல் இந்த பாடங்களில் நாட்டம் கொண்டவர் களால் சிறந்த தேர்ச்சி பெற்று, வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற முடியும். பிளஸ்-2 படிப்பிற்கு பிறகு நேரடியாக பி.எஸ்சி. ஸ்போர்ட்ஸ் என்ஜினீயரிங் படிப்பில் சேரலாம். அல்லது மேற்குறிப்பிட்டுள்ள என்ஜினீயரிங் பிரிவில் டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்தவர்களும் இந்த படிப்பை மேற்படிப்பாக படித்து வாய்ப்பு பெறலாம்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் முன்னணி படிப்புகளில் ஒன்றாக ஸ்போர்ட்ஸ் என்ஜினீயரிங் படிப்பு தேர்வு செய்யப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இந்த துறையில் தங்கள் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்ளலாம்.

மேலும் செய்திகள்