மனித உணர்வுள்ள ரோபோவை உருவாக்கும் உயிர்ப்பொருள்
மனிதர்களுக்கு நிகரான உடலையோ, உடல் பாகங்களையோ கொண்டவை அல்ல
‘சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை’ என்பார்கள். தற்போது வரை உருவாக்கப்பட்டுள்ள ரோபோக்கள் அனைத்தும் அந்த வகையிலேயே இருக்கின்றன. ஆனால் சொந்தமாக சிந்தித்து செயல்படும் ரோபோக்கள் சில இங்கொன்றும் அங்கொன்றுமாய் உருவாக்கப்பட்டு வருவதும் உண்மையே.
உதாரணமாக, அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் டைனாமிக்ஸ் (Boston dynamics) நிறுவனத்தின் ஸ்பாட் மினி (spot mini) மற்றும் அட்லஸ் (Atlas) உள்ளிட்ட பல நவீன ரோபோக்களைக் கூறலாம். மூடியிருக்கும் கதவை தானே திறந்துகொண்டு வெளியே செல்வதும், படிக்கட்டுகளில் ஏறிச்செல்வதும் ஸ்பாட் மினி ரோபோவின் விசேஷத் திறன்களில் சில.
அதுபோலவே, தற்போதுள்ள உலகின் மிகவும் சக்திவாய்ந்த ‘ஹியூமனாய்டு’ வகை (மனிதர்களுக்கு நிகரான தோற்றம் கொண்ட மற்றும் சில மனித செயல்பாடுகளை மேற்கொள்ளும் திறன்கொண்ட) ரோபோக்களில் ஒன்றாக கருதப்படும் அட்லஸ், மனிதர்களைப் போலவே இரண்டு கால்களில் நடக்கும் மற்றும் இரண்டு கைகளால் மிகவும் எடைகொண்ட பொருட்களை தூக்கிச்செல்லும் அசாத்திய திறன்கொண்ட ஒரு ஹியூமனாய்டு ஆகும்.
நடக்கும்போது யாராவது அதனை பிடித்து கீழே தள்ளிவிட்டாலும் தானாகவே மீண்டும் எழுந்து தொடர்ந்து நடப்பதும், பின்புறமாக அட்டகாசமாக பல்டி அடிப்பதும் அட்லஸின் விசேஷத் திறன்களில் சில.
இத்தனையும் செய்தாலும், மனிதர்களைப் போல தோற்றமளித்தாலும் கூட இந்த ரோபோக்கள் மனிதர்களுக்கு நிகரான உடலையோ, உடல் பாகங்களையோ கொண்டவை அல்ல. மாறாக, பெரும்பாலும் இரும்பாலான பாகங்களால் உருவாக்கப்படும் செயற்கை எந்திரங்கள்தான் இந்த ஹியூமனாய்டு ரோபோக்கள்.
மனிதனுக்கு நிகரான ரோபோக்கள் என்றால் முதலில் அவற்றுக்கு குறைந்தபட்சம் மனிதனுடைய தோல், கண்கள், தொடு உணர்வு ஆகிய பல குணாதிசயங்கள் இருக்க வேண்டும். ஆனால், ரோபோக்களில் இதுவரை சாத்தியப்படாத மனித உடலமைப்பு மற்றும் உயிரியல் பகுதிகள் இனி வரும் காலங்களில் சாத்தியப்படும் என்கிறது அமெரிக்காவில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் டான் லுவோ உள்ளிட்ட ஆய்வுக்குழுவினர் உற்பத்தி செய்துள்ள உயிர்ப்பொருள் (biomaterial) தொடர்பான ஆய்வு.
இந்த புதிய ஆய்வு முயற்சியில் உருவாக்கப் பட்டுள்ள உயிர்ப்பொருள் வளர்ச்சிதை மாற்றங்கள், தன்னைத்தானே உருவாக்கிக்கொள்ளும் திறன் மற்றும் ஒழுங்குபடுத்திக் கொள்ளும் திறன் ஆகிய பிரத்யேகத் திறன்களைக் கொண்டது என்று கூறப் படுகிறது. மேலும், பூமியைப் பற்றிப் படர்ந்து கொடி போல நீண்டு வளரும் தன்மைகொண்ட ஸ்லைம் மோல்டு (slime mould) போல வளரும் திறன்கொண்ட இந்த உயிர்ப் பொருளால் ஆன செயற்கை அமைப்புகள் அனைத்தும் ‘டேஷ்’ (DASH: DNA-based Assembly and Synthesis of Hierarchical materials) எனும் பெயர்கொண்ட, டி.என்.ஏ-வால் ஆனவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக, உயிரினங்களில் உள்ள டி.என்.ஏ. போலவே, வளர்ச்சிதை மாற்றங்கள் மற்றும் மீளாக்கம் (Regenaration) ஆகியவற்றை மேற்கொள்வதற்கான கட்டளைகள் இந்த உயிர்ப்பொருளில் இருக்கின்றன என்கிறார் ஆய்வாளர் டான் லுவோ.
ஒரு செயற்கை வளர்சிதை மாற்றத்தால் சக்தியூட்டப்பட்டு, இதுவரை இல்லாத அளவுக்கு உயிர்களுக்கு நிகரான தோற்றம் கொண்ட ஆனால் உயிரற்ற அமைப்புகளை இந்த உயிர்பொருள் மூலம் உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளோம் என்கிறார் ஆய்வாளர் டான்.
இத்தகைய அமைப்புகளுக்கு அடிப்படையான ‘டேஷ்’, பாலிமர்களாக மற்றும் மிகப் பெரிய வடிவங்களாக தன்னைத்தானே மறுசீரமைப்பு செய்துகொள்ளும் நானோ அளவிலான கட்டுமானப் பகுதிகளால் ஆனது என்று கூறப்படுகிறது. இந்த உயிர்ப்பொருளானது, டி.என்.ஏ-வில் உள்ள நியூக்லியோடைடு எனப்படும் மரபியல் மூலக்கூறுகளால், முக்கியமாக 55 நியூக்லியோடைடுகளால் ஆன அடிப்படை இழையால் ஆனது.
வெளிப்புற உள்ளீடு அல்லது கட்டளைகள் ஏதும் இல்லாமல், அனைத்து செயல்களையும் தானாகவே மேற்கொள்ளும் திறன்கொண்ட இந்த உயிர்பொருள் போன்ற சில மூலக் கூறுகளால்தான் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு உயிர்கள் தோன்றியிருக்க வேண்டும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
மேலும், தற்போது டி.என்.ஏ. மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த உயிர்ப்பொருளானது மிகவும் அடிப்படையானது என்றாலும் கூட, எதிர்க்காலத்தில் தன்னைத்தானே உருவாக்கிக்கொள்ளும் அசாத்திய திறன்கொண்ட ரோபோக்களை உருவாக்கும் வல்லமை கொண்டது என்று கூறப்படுகிறது.
கடந்த காலத்தில், எந்திரங்களின் திறன்களை அதிகரிக்கும் மற்றும் மனித உடலை சீரமைக்கும் உயிர்ப்பொருட்களை நம்மில் பலர் கண்டு கேட்டிருப்போம். அதுபோல இந்த புதிய உயிர்ப்பொருளானது, நீண்ட ஆயுளைக் கொண்டதாக உருவாக்கப்படுவதும், உணவு மற்றும் ஒளியால் ஈர்க்கப்படாத வண்ணம் புரோகிராம் செய்யப்பட்டும் இருக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
ஆக மொத்தத்தில், செயற்கை வளர்ச்சிதை மாற்றத்தை கொண்ட இந்த உயிர்ப்பொருள் ரோபோட்டிக்ஸ் (எந்திரவியல்) துறையில் ஒரு புதிய மைல்கல் என்று கூறப்படுவதும் குறிப் பிடத்தக்கது.
- ஹரிநாராயணன்