மணக்குடி மீனவர் கொலை: மேலும் 2 பேர் கைது

மணக்குடி மீனவர் கொலை வழக்கில் மேலும் 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-04-28 22:15 GMT
மேலகிருஷ்ணன்புதூர்,

மணக்குடி லூர்து மாதா தெருவை சேர்ந்தவர் வின்சென்ட் (வயது 35), மீன்பிடி தொழிலாளி. இவருக்கு திருமணம் முடிந்து மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். வின்சென்ட் தினமும் இரவு அந்த பகுதியில் உள்ள குருசடி முன்பு குடும்பத்துடன் தூங்குவது வழக்கம். சம்பவத்தன்று இரவும் வின்சென்ட் குடும்பத்துடன் குருசடி முன்பு தூங்கி கொண்டிருந்தார். அப்போது, நள்ளிரவில் திடீரென முகத்தில் ‘டார்ச்லைட்‘ வெளிச்சம் பட்டதால் வின்சென்ட் திடுக்கிட்டு எழுந்து பார்த்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கிதியோன் டார்ச்லைட்டுடன் நின்று கொண்டிருந்தார்.

பெண்கள் தூங்கும் பகுதியில் டார்ச்லைட் அடித்ததை குறித்து தட்டிக்கேட்டார். இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, கிதியோனுக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த ஜஸ்டின், லாடஸ், அந்தோணி, அஸ்வின், பாண்டியன் மற்றும் 2 சிறுவர்கள் என 8 பேர் திரண்டு அரிவாளால் வின்சென்டை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் வின்சென்ட் பரிதாபமாக இறந்தார்.

மேலும் 2 பேர் கைது

இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய லாடஸ் (47), அந்தோணி (49), அஸ்வின் (19), ஜஸ்டின் (22) மற்றும் 2 சிறுவர்கள் என 6 பேரை பிடித்து சிறையில் அடைத்தனர்.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை தனிப்படையினர் தீவிரமாக தேடிவந்தனர். இந்தநிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரும் புத்தளம் அருகே மணவாளபுரம் பகுதியில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

தகவல் அறிந்த தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த கிதியோன் (24), பாண்டியன் (46) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்