வெளியிடங்களில் சாப்பாடு விற்பனை செய்யப்படுவதாக புகார்: அம்மா உணவகங்களில் பாத்திரத்தில் உணவு வழங்க தடை

வெளியிடங்களில் கூடுதல் விலைக்கு சாப்பாடு விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, அம்மா உணவகங்களில் பாத்திரத்தில் உணவு வழங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்குள்ள ஊழியர்களுடன் அப்பகுதிவாசிகள் மல்லுக்கட்டி வருகின்றனர்.

Update: 2019-04-28 22:30 GMT
சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கனவு திட்டங்களில் ஒன்று, அம்மா உணவகம். ஏழை-எளிய மக்கள் வயிறார சாப்பிட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டத்தை கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி ஜெயலலிதா சென்னையில் தொடங்கிவைத்தார். பின்னர் மாநிலம் முழுக்க அம்மா உணவக திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

சென்னையில் அம்மா உணவகங்கள், பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டு வருகிறது. அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள 7 அம்மா உணவகங்கள் உள்பட சென்னையில் மொத்தம் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் நுங்கம்பாக்கத்தில் மட்டும் அதிகபட்சமாக 38 அம்மா உணவகங்கள் அமைந்துள்ளன. நாள்தோறும் சராசரியாக 3 லட்சம் இட்லிகளும், 29 ஆயிரம் பொங்கல், ஒரு லட்சத்து 16 ஆயிரம் கலவை சாதம், 2 லட்சம் சப்பாத்திகளும் தயாரிக்கப்பட்டு அம்மா உணவகம் மூலம் விற்கப்பட்டு வருகிறது.

அம்மா உணவகங்களில் ஏழை-நடுத்தர மக்கள் மலிவு விலைக்கு வயிறார உணவு சாப்பிட்டு வந்தனர். அருகில் உள்ள வீடுகளில் இருந்தும் தினசரி உணவுகளை சாப்பிட்டு வந்தனர். மேலும் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் காலை உணவை அம்மா உணவகங்களில் முடித்துவிட்டு, மதியத்துக்கு தேவையான உணவையும் டிபன் கேரியரில் கட்டி சென்றனர்.

இப்படி எல்லா தரப்பினரின் உணவு தேவைகளையும் அம்மா உணவகம் பூர்த்தி செய்து வந்தது. இந்தநிலையில் சாலையோர வியாபாரிகள் மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் அம்மா உணவகங்களில் தேவையான உணவுகளை அதிக அளவில் பாத்திரங்களில் வாங்கிச்சென்று, வெளியில் அதிக விலைக்கு விற்பதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஏழை மக்களின் வயிற்று பசியை தீர்த்துவைப்பதற்காக தொடங்கப்பட்ட அம்மா உணவகங்கள், மறைமுகமாக வணிக நோக்குடன் சிலரால் பயன்படுத்தப்படக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து மாநகராட்சி மூலம் அனைத்து அம்மா உணவகங்களின் பொறுப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

அந்த சுற்றறிக்கையில், ‘அம்மா உணவகங்களுக்கு சாப்பிட வருவோரின் பசியை தீர்த்து வைப்பது உங்கள் கடமை. வேண்டும் அளவுக்கு அவர்களுக்கு உணவு அளிக்கலாம். எந்த காரணத்தை கொண்டும் பாத்திரங்கள், கேரியரில் சாப்பாடு வழங்கக்கூடாது. இதில் மிகுந்த கவனமாக இருக்கவேண்டும். மொத்தமாக பெரிய அளவில் உணவுகளை வழங்கவும் கூடாது. டோக்கன் கொடுத்து மட்டுமே சாப்பாடு வழங்க வேண்டும். அப்படி பாத்திரங்களில் உணவு வழங்குவது தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’, என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதனைதொடர்ந்து அம்மா உணவகங்களில் பாத்திரங்கள் கொண்டு வருவோருக்கு உணவு வழங்குவது மறுக்கப்படுகிறது. அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் பாத்திரங்களில் வந்து கேட்டால் கூட வேறு வழியின்றி ஊழியர்கள் மறுத்துவிடுகின்றனர்.

‘எதுவா இருந்தாலும் இங்கேயே சாப்பிட்டுவிட்டு செல்லுங்கள், பார்சல் கொடுக்க முடியாது’ என்று திட்டவட்டமாக கூறிவிடுகின்றனர். இதனால் வழக்கமாக பாத்திரங்களில் உணவு வாங்கி சாப்பிட்டு வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். குறிப்பாக அப்பகுதிவாசிகள்-ஊழியர்கள் இடையே தினந்தோறும் மல்லுக்கட்டு நடக்கிறது. பாத்திரங்களில் உணவு வாங்க விதிக்கப்பட்ட தடை காரணமாக அம்மா உணவகங்களில் விற்பனையும் ஓரளவு குறைந்துள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து மாத்தூரை சேர்ந்த அம்மு என்பவர் கூறுகையில், “பெரியளவில் உணவு வாங்கி செல்வோருக்கு தடை விதிப்பது சரிதான். ஆனால் ஏழை மக்களுக்கு இந்த தடை ஏற்கத்தக்கதல்ல. கூலி வேலைக்கு செல்வோர்கள் பாத்திரங்களில் உணவு வாங்கி மதியத்துக்கு சாப்பிட்டு கொள்வார்கள். இந்த தடை அவர்களை பாதிக்காதா?

‘டாஸ்மாக்’ கடைகளில் மதுவை போட்டிபோட்டு விற்பனை செய்யும் அரசு, ஏழை மக்களுக்கு வழங்கப்படும் மலிவு விலை உணவுக்கு நிபந்தனை போடலாமா? பாத்திரத்தில் உணவு வாங்கி வீட்டுக்கு சென்று சாப்பிடுவது ஒன்றும் தவறில்லை” என்றார்.

மேலும் செய்திகள்