பொள்ளாச்சி பாலியல் விவகாரம், சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

Update: 2019-04-28 23:30 GMT
கோவை,

பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தனர்.

இதில் கைதான மணிவண்ணனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் பலாத்காரம் செய்த வீடியோ அவருடைய செல்போனில் இருந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார், இந்த சம்பவத்தில் அவர்கள் 5 பேர் மீதும் கூடுதலாக பாலியல் பலாத்கார வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இதில் பாதிக்கப்பட்ட நபர்கள் தாராளமாக புகார் செய்யலாம் என்றும், தங்களிடம் இருக்கும் ஆதாரங்களை கொடுக்கலாம் என்றும் போலீசார் அறிவித்தனர். இதையடுத்து ஏராளமான இளம்பெண்கள் புகார் செய்ததுடன், தங்களிடம் இருந்த ஆதாரங்களையும் போலீசிடம் ஒப்படைத்தனர்.

அத்துடன் குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை வாங்கிக்கொடுப்பதற்காக சி.பி.சி.ஐ.டி. குற்றப் பத்திரிகையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் இந்த வழக்கை சி.பி.ஐ. ஏற்றது. இது தொடர்பாக நேற்று விசாரணை தொடங்கப்படும் என்றும் சி.பி.ஐ. சார்பில் அறிவிக்கப்பட்டது. விசாரணை அதிகாரியாக சி.பி.ஐ.யை சேர்ந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கலைமணி நியமிக்கப் பட்டார்.

மேலும் இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் மற்றும் ஆதாரங்களை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சி.பி.ஐ. ஐ.ஜி. வித்பிளஸ் குமார் சவுத்ரி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கலைமணி, இன்ஸ்பெக்டர் விஜயா வைஷ்ணவி மற்றும் போலீசார் நேற்று மாலை கோவை வந்தனர்.

பின்னர் அவர்கள் இந்த சம்பவத்தில் விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசாரை சந்தித்தனர். அப்போது அவர்கள் தங்களிடம் இருந்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தனர். அத்துடன் இந்த வழக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் சி.பி.ஐ.க்கு தெரிவித்தனர்.

விசாரணையை தொடங்கினர்

இதையடுத்து விசாரணையை தொடங்கிய சி.பி.ஐ. அதிகாரிகள், வழக்கு தொடர்பாக கூடுதல் விவரங்களையும் கேட்டு தெரிந்து கொண்டனர். பின்னர் ஐ.ஜி. வித்பிளஸ் குமார் சவுத்ரி தலைமையில் சி.பி.ஐ. அதிகாரிகள் பொள்ளாச்சி சென்று விசாரணை தொடங்கிநடத்தி வருகிறார்கள்.

அத்துடன் சம்பவம் நடந்த பண்ணை வீடுகள் எங்கு இருக்கிறது என்பது தொடர்பாக பொள்ளாச்சி போலீசில் கேட்டறிந்தனர். மேலும் இந்த வழக்கில் கைதாகி தற்போது கோவை மத்திய சிறையில் இருக் கும் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோரிடமும் விசாரணை நடத்த உள்ளனர்.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான ஆவணங்கள், ஆதாரங்கள் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன. அவர்கள் விசாரணையை தொடங்கி விட்டதால், இன்றோ (திங்கட்கிழமை) அல்லது நாளையோ (செவ்வாய்க்கிழமை) சம்பவம் நடந்த திருநாவுக்கரசின் பண்ணை வீட்டிற்கு சென்று ஆய்வு செய்வார்கள். மேலும் கைதாகி சிறையில் உள்ள 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்து உள்ளனர். இதற்காக விரைவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த சம்பவத்தில் 19 வயது கல்லூரி மாணவி கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி பொள்ளாச்சி போலீசில் புகார் செய்தார். அதே மாதம் 26-ந் தேதி அந்த மாணவியின் அண்ணன் பொள்ளாச்சி அருகே சென்ற போது சின்னாம்பாளையத்தை சேர்ந்த செந்தில் (33), மற்றொரு வசந்தகுமார் (26), மணி வண்ணன் (25), பார் நாகராஜ் (28), பாபு (26) ஆகிய 5 பேரும் சேர்ந்து அவரை வழிமறித்து தாக்கியதுடன் வழக்கை வாபஸ்பெறக்கோரி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இந்த வழக்கையும் சி.பி.ஐ. தன்வசம் எடுத்து உள்ளது. இதில் விசாரணை அதிகாரியாக சி.பி.ஐ.யை சேர்ந்த இன்ஸ்பெக்டர் விஜயா வைஷ்ணவி நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கிலும் தற்போது விசாரணை தொடங்கி உள்ளது. இது தொடர்பான ஆவணங்களை போலீசாரிடம் இருந்து பெற்று உள்ளனர். இந்த அடிதடி வழக்கில் தொடர்புடைய மணிவண்ணனுக்கு பாலியல் பலாத்காரத்திலும் தொடர்பு இருந்ததால் அவர் அந்த வழக்கிலும் சேர்க்கப்பட்டார். பார் நாகராஜ் உள்பட மற்ற 4 பேரும் தற்போது ஜாமீனில் உள்ளனர். அவர்களிடமும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக ஓரிரு நாட்களில் அவர்களை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்