பரமக்குடி நகர் பகுதியில் மின்மோட்டார் மூலம் குடிநீர் திருட்டு தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி
பரமக்குடி நகர் பகுதியில் மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடப்படுவதால் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
பரமக்குடி,
பரமக்குடியில் நகராட்சி நிர்வாகம் மூலம் ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்கப்படுகிறது. தற்போது கோடை வெயில் வாட்டி வதைப்பதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பரமக்குடி நகர மக்களுக்கு வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகள் மூலமும், காவிரி குடிநீரையும் வினியோகம் செய்து வருகின்றனர்.
இந்த குடிநீரை வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் மின் மோட்டார்களை பொருத்தி திருடுகின்றனர். இதனால் அவர்களுக்கு தேவைக்கு அதிகமாகவும், மற்றவர்களுக்கு அன்றாட தேவைக்கே குடிநீர் கிடைக்காத நிலையும் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக பொதுமக்கள் நகராட்சி நிர்வாகம் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே மின் மோட்டார் பொருத்தி குடிநீர் திருடுபவர்களை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.