திருமண விழாவிற்கு சென்ற தனியார் பஸ் மரத்தில் மோதி விபத்து மணமகன் உள்பட 40 பேர் காயம்

போச்சம்பள்ளி அருகே திருமண விழாவிற்கு சென்ற தனியார் பஸ் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் மணமகன் உள்பட 40 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-04-28 22:30 GMT
மத்தூர்,

கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் ஜாபர் சாதிக் (வயது 25). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், போச்சம்பள்ளி அருகே உள்ள கல்லாவியைச் சேர்ந்த 20 வயது பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை மணமகன் சார்பில் உறவினர்கள் 2 பஸ்களில் கிருஷ்ணகிரியில் இருந்து கல்லாவியில் உள்ள மணமகள் வீட்டுக்கு திருமண விழாவுக்காக பஸ்சில் புறப்பட்டனர்.

இந்த 2 பஸ்களில் சுமார் 120 பேர் பயணம் செய்தனர். இதில் ஒரு பஸ் போச்சம்பள்ளி அருகே வந்த போது புளியம்பட்டி கூட்டு ரோடு அருகில் சாலையோரத்தில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த கற்களின் மீது ஏறியது. அப்போது பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த மணமகன் ஜாபர்சாதிக், உறவினர்கள் திருப்பத்தூர் முமீன்தாஜ் (21), நசீம் (40), முபாரக் (8) மணமகனின் தாய் பர்வீன் (45), நூர்ஜான் (60), காரிமங்கலம் சாய்னா (30) உள்பட 40 பேர் காயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் காயம் அடைந்த காவேரிப்பட்டணத்தை சேர்ந்த புகைப்பட கலைஞர் சக்திவேல் (45) என்பவர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மணமகன் மற்றும் அவரது தாயார் விபத்தில் சிக்கியதால் திருமணம் நின்றது. இந்த விபத்து குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமண கோஷ்டியினர் சென்ற பஸ் விபத்தில் சிக்கி மணமகன் உள்ளிட்ட 40 பேர் காயம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்