திருப்பூரில் அதிகாலையில் பெண் குளித்ததை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்

திருப்பூரில் அதிகாலையில் குளியலறையில் குளித்துக்கொண்டு இருந்த பெண்ணை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

Update: 2019-04-28 23:00 GMT

திருப்பூர்,

திருப்பூர் ஆண்டிப்பாளையம் பகுதியில் பனியன் நிறுவன தையல் தொழிலாளி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று அதிகாலை 5 மணி அளவில் அந்த தொழிலாளியின் மனைவி, கோவிலுக்கு செல்வதற்காக அங்குள்ள ஒரு குளியலறையில் குளித்துக்கொண்டு இருந்தார்.

அந்த நேரம் குளியலறையின் ஜன்னல் கம்பிகளுக்கு இடையே திடீரென்று வெளிச்சம் வந்து சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கு பார்த்தபோது செல்போன் மட்டும் தெரிந்தது. உடனடியாக அந்த பெண், நைசாக வெளியே சென்று தனது கணவரிடம் விவரத்தை கூறினார். அந்த தொழிலாளி விரைந்து சென்று குளியலறை அருகே செல்போனுடன் நின்ற வாலிபரை மடக்கி பிடித்தார். அந்த வாலிபர் அவரிடம் இருந்து தப்ப முயன்றார்.

சத்தம் போட்டதால் அருகில் குடியிருந்தவர்களும் ஓடிவந்து அந்த வாலிபரை பிடித்து தர்மஅடி கொடுத்து திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த வாலிபர் திருப்பூர் ஆண்டிப்பாளையத்தை சேர்ந்த மனோஜ்குமார் (வயது 20) என்பதும், திருப்பூர் அவினாசி ரோட்டில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

மனோஜ்குமார் ஏற்கனவே அந்த பகுதியில் அந்த பெண்ணின் வீட்டு அருகே வாடகைக்கு தங்கியிருந்துள்ளார். இதனால் அங்குள்ள குளியலறை குறித்த விவரங்கள் அவருக்கு நன்கு தெரிந்துள்ளது. அதிகாலையில் தனது மோட்டார் சைக்கிளில் மனோஜ்குமார் அந்த பகுதி வழியாக சென்றுள்ளார். அப்போது குளியலறையில் விளக்கு எரிந்துள்ளது. இதனால் குளியல் அறைக்குள் யாரோ குளித்துக்கொண்டு இருக்கிறார் என்பதை அறிந்து, தனது மோட்டார் சைக்கிளை வீட்டு அருகே கொண்டு வந்து நிறுத்தி விட்டு, ஜன்னல் வழியாக குளியலறைக்குள் செல்போனில் வீடியோ எடுத்தது தெரியவந்தது.

இது குறித்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கேசவன், ஏட்டு சிவராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மனோஜ்குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனோஜ்குமார் இதுபோல் மேலும் பல சம்பவங்களில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில், அவருடைய செல்போனில் பதிவாகியிருக்கும் வீடியோக்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்