அன்னவாசல் அருகே அரசு பஸ் கவிழ்ந்தது வாலிபர் பலி; 30 பேர் படுகாயம்

அன்னவாசல் அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க திருப்பிய போது அரசு பஸ் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் பலியானார். 30 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2019-04-28 23:00 GMT
அன்னவாசல்,

மணப்பாறையில் இருந்து அன்னவாசல் வழியாக புதுக்கோட்டைக்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ்சை புதுக்கோட்டை மாவட்டம், தாவூதுமில் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 48) ஓட்டினார். கண்டக்டராக புதுக்கோட்டையை சேர்ந்த கிருஷ்ணன் இருந்தார்.அந்த பஸ், அன்னவாசல்-புதுக்கோட்டை சாலையில் பெருஞ்சுனை என்ற இடத்தில் சென்ற போது, எதிரே லாரி ஒன்று வந்துள்ளது. அப்போது பெருஞ்சுனையில் இருந்து அன்னவாசலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற கருப்பையா மகன் மதியழகன் (24), லாரியை முந்திச் செல்ல முயன்றார். இதைக்கண்ட பஸ் டிரைவர், மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க பஸ்சை திருப்பிய போது சாலையின் ஓரத்தில் பஸ் கவிழ்ந்தது. இருப்பினும் பஸ் மீது, மோட்டார் சைக்கிள் மோதியதில், மதியழகன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் பஸ் கவிழ்ந்ததில், அதில் பயணித்த 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் பஸ்சின் கண்ணாடியை உடைத்து பயணிகளை மீட்டனர். பின்னர் அவர்களை இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் இருந்து வந்த ஆம்புலன்ஸ்களில் ஏற்றி, சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அன்னவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உதவி செய்தனர். பின்னர் மதியழகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்