குமரி மாவட்ட ரெயில் நிலையங்களில் பயணிகளிடம் ‘மெட்டல் டிடெக்டர்’ சோதனை போலீஸ் பாதுகாப்பும் அதிகரிப்பு
இலங்கை குண்டு வெடிப்பை தொடர்ந்து குமரி மாவட்ட ரெயில் நிலையங்களில் பயணிகளிடம் ‘மெட்டல் டிடெக்டர்’ மூலம் சோதனை நடத்தப்பட்டது.
நாகர்கோவில்,
இலங்கையில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் அப்பாவி மக்கள் கொத்து கொத்தாக உயிரிழந்தனர். இந்த நிலையில் தமிழகத்திலும் முக்கிய நகரங்கள், ரெயில் நிலையங்கள், பாலங்கள் போன்றவற்றை தகர்க்க பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக 19 பயங்கரவாதிகள் ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் ஊடுருவி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதே போல குமரி மாவட்டத்திலும் பாதுகாப்பு மற்றும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் குமரி மாவட்டத்துக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்று போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தெரிவித்து இருக்கிறார். எனினும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
அதாவது முக்கிய இடங்கள் மற்றும் மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இலங்கை சம்பவத்தில் ஆலயத்துக்கு பிரார்த்தனை செய்ய வந்தது போல நடித்து பயங்கரவாதிகள் இந்த கொடூரத்தை நிகழ்த்தினார்கள். எனவே குமரி மாவட்டத்தில் முக்கிய கோவிலுக்கு வரும் பக்தர்களை போலீசார் ‘மெட்டல் டிடெக்டர்‘ மூலம் சோதனை நடத்திய பிறகே சாமி கும்பிட அனுமதிக்கிறார்கள். அதிலும் குறிப்பாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ‘மெட்டல் டிடெக்டர்‘ சோதனை தீவிரமாக நடக்கிறது.
மேலும் கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவாமல் தடுக்க கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்த கண்காணிப்பு பணி நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை நடக்கிறது. கடலுக்கு படகுகளில் சென்றும் கண்காணிக்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் இருந்து கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய இடங்களில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் ஆய்வு செய்தனர். அங்குள்ள வருகை பதிவேட்டையும் பார்வையிட்டார்கள். சந்தேகப்படும் படியாக தங்கி இருந்தவர்களிடமும் விசாரணையும் நடத்தப்பட்டது.
இதே போல கோழிப்போர்விளை, பழவிளை மற்றும் ஞாறான்விளை, பெருமாள்புரம் ஆகிய இடங்களில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களுக்கு புதிதாக யாரேனும் வந்துள்ளனரா? என்றும் ஆய்வு நடத்தப்பட்டது. அதோடு சோதனை சாவடிகளிலும் கிடுக்குப்பிடி சோதனை நடக்கிறது. லாரிகள் மற்றும் சந்தேகப்படும் படியாக மாவட்டத்துக்குள் நுழையும் கனரக வாகனங்களை நன்கு சோதனை செய்த பிறகே போலீசார் அனுமதிக்கின்றனர்.
மேலும் ரெயில் நிலையங்களிலும் ஆய்வு பணிகள் நடக்கின்றன. இதுபற்றி ரெயில்வே போலீசார் கூறுகையில், “இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பிறகு குமரி மாவட்டத்தில் அனைத்து ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் பயணிகளிடம் ‘மெட்டல் டிடெக்டர்‘ மூலமாக சோதனை நடத்தி வருகிறோம். அவர்கள் கொண்டு வரும் உடமைகளையும் சோதனைக்கு பின்னரே கொண்டு செல்ல அனுமதிக்கின்றோம். மேலும் தண்டவாளங்கள், ரெயில்வே பாலங்களிலும் சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இதுபோக ரெயில்களிலும் பாதுகாப்பு பணிக்காக கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதிலும் முக்கியமாக கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் 8 போலீசார் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். வழக்கமாக இந்த ரெயிலில் 3 போலீசார் மட்டுமே இருப்பார்கள். இதே போல பிற ரெயில்களிலும் பயணிகளின் பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்’’ என்றனர்.