குருந்தன்கோடு அருகே துணிகரம் கிறிஸ்தவ ஆலயத்தில் பூட்டை உடைத்து 3 பவுன் நகை கொள்ளை

குருந்தன்கோடு அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் பூட்டை உடைத்து மாதா சொரூபத்தில் இருந்த 3 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர்.

Update: 2019-04-28 23:00 GMT
அழகியமண்டபம்,

குருந்தன்கோடு அருகே குழிவிளை பகுதியில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை வழக்கமான ஜெபமாலை, திருப்பலி ஆகியவற்றை முடித்து இரவு 8 மணிக்கு கோவில் பணியாளர் பூட்டி விட்டு சென்றார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை 6 மணிக்கு திருப்பலி நடைபெறும். அதற்காக காலையில் பணியாளர் ஆலயத்தை திறக்க வந்தார்.

அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, அங்கு மாதா சொரூபத்தில் உள்ள 3 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. இதேபோல் அங்கு வைக்கப்பட்டு இருந்த நற்கருணை பெட்டியும் மாயமாகி இருந்தது. பின்னர், இதுகுறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

அப்போது, கோவிலில் உள்ள ஜெனரேட்டர் அறையில் நற்கருணை பெட்டி உடைந்து கிடப்பதை போலீசார் கண்டனர். நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் மாதா சொரூபத்தில் இருந்த நகையை திருடியுள்ளனர். பின்னர் நற்கருணை பெட்டியில் பணம் எடுத்தவர்கள், அதில் பணம் இல்லை என்றவுடன் அதனை உடைத்து ஜெனரேட்டர் அறையில் வீசிச் சென்றது தெரியவந்தது.

மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில், நள்ளிரவில் கோவிலின் அருகில் சந்தேகப்படும் படியாக 2 மோட்டார் சைக்கிள்கள் நிற்பது பதிவாகி இருந்தது. அந்த பதிவுகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த கொள்ளை குறித்து பங்கு பேரவை தலைவர் ஜெகன் இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்