குடும்ப அரசியல் பற்றி பேச பா.ஜனதாவுக்கு தகுதி இல்லை தினேஷ் குண்டுராவ் பேட்டி
கலபுரகி தொகுதியில் உமேஷ் ஜாதவ் தோல்வி அடைவது உறுதி என்றும், குடும்ப அரசியல் பற்றி பேச பா.ஜனதாவுக்கு தகுதி இல்லை எனவும், காங்கிரஸ் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் காலியாக உள்ள குந்துகோல், சிஞ்சோலி ஆகிய 2 சட்டசபை தொகுதி களுக்கு அடுத்த மாதம்(மே) 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வு குறித்து பெங்களூருவில் நேற்று அக்கட்சியின் தலைவா்கள் ஆலோசனை நடத்தினார்கள். இந்த கூட்டம் கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் தலைமையில் நடைபெற்றது.
பொறுப்பாளர்கள் நியமனம்
இந்த கூட்டத்தில் சிஞ்சோலி தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக துணை முதல்-மந்திரி பரமேஸ்வரும், குந்துகோல் தொகுதியின் பொறுப்பாளராக மந்திரி டி.கே.சிவக்குமாரும் நியமிக்கப்பட்டனர்.
ஆலோசனை கூட்டம் முடிந்ததும் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் நிருபர் களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
20 தொகுதிகளில் வெற்றி
நாடாளுமன்ற தேர்தல் வெற்றி வாய்ப்பு மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ள 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து வேணுகோபாலுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி 20 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி. மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். பா.ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர சாத்தியமில்லை. காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியை பிடிக்கும். ராகுல்காந்தி பிரதமராவார்.
உமேஷ் ஜாதவ் தோல்வி
இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளும் காங்கிரஸ் வசம் இருந்தது. அதனால் 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெறும். சிஞ்சோலி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த உமேஷ் ஜாதவ் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் இணைந்தார். கலபுரகி நாடாளுமன்ற தொகுதியில் அவர் போட்டியிட்டுள்ளார்.
அந்த தொகுதியில் அவர் தோல்வி அடைவது உறுதி. காங்கிரஸ் கட்சியின் முதுகில் குத்திவிட்டு பா.ஜனதாவில் சேர்ந்துள்ள உமேஷ் ஜாதவுக்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
பா.ஜனதாவுக்கு தகுதி கிடையாது
சிஞ்சோலி தொகுதியில் உமேஷ் ஜாதவின் மகனுக்கு டிக்கெட் வழங்கப்படும் என்று பா.ஜனதா தலைவர்கள் உறுதி செய்துள்ளனர். காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் குடும்ப அரசியலில் ஈடுபடுவதாக பா.ஜனதா வினர் கூறி வருகின்றனர்.
தற்போது உமேஷ் ஜாதவ் மகனுக்கு பா.ஜனதா டிக்கெட் கொடுக்கிறது. இதனால் குடும்ப அரசியல் பற்றி பேசுவதற்கு பா.ஜனதாவுக்கு தகுதி இல்லை.
இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.