வெடிகுண்டு மிரட்டல் காரணமாக கோவை ரெயில் நிலையத்தில் தீவிர சோதனை

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக கோவை ரெயில் நிலையம் மற்றும் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

Update: 2019-04-27 23:00 GMT
கோவை,

இலங்கையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த தொடர் குண்டு வெடிப்பில் பலர் உயிரிழந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என்று கர்நாடக மாநிலம் பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம ஆசாமி ஒருவன் போன் செய்து மிரட்டினான். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இதன் எதிரொலியாக கோவை ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு அதிரடி சோதனை நடத்தப்பட்டது. கோவை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் தலைமையில் ரெயில்வே போலீசார் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் இதில் ஈடுபட்டனர். கோவையில் இருந்து புறப்பட்ட சேரன் எக்ஸ்பிரஸ் மற்றும் அதைத்தொடர்ந்து கோவை வழியாக சென்ற அனைத்து ரெயில்களிலும் மெட்டல் டிடெக்டர், மோப்ப நாய்களை கொண்டு சோதனை நடத்தப்பட்டது.

ரெயில் நிலையத்துக்குள்ளும், ரெயில் நிலைய நுழைவு வாயிலிலும், வந்து நிற்கும் ரெயில்களிலும், ரெயில் நிலையத்தின் இரண்டு பக்கமும் அமைந்துள்ள தண்டவாளங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. விடிய விடிய நடந்த இந்த சோதனையில் சந்தேகப்படும் வகையில் மர்ம பொருட்களோ, ஆசாமிகளோ யாரும் சிக்கவில்லை. இதனால் கோவை ரெயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. இதேபோல கோவையில் உள்ள லாட்ஜ்கள், பஸ் நிலையங்களிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள்.

இதுகுறித்து கோவை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை போலீசாரால் மட்டுமே பிடிக்க முடியாது. மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் சோதனை நடத்துவது என்பது இயலாத காரியம். உதாரணத்துக்கு கோவை ரெயில் நிலையத்தில் சோதனை நடத்த வேண்டுமென்றால் அதன் நுழைவு வாயிலில் மட்டுமே நடத்த வேண்டும். அப்படி நடத்துவதால் மட்டுமே சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க முடியாது. காரணம் ரெயில் நிலையத்துக்கு பல வழிகள் இருப்பதால் யார் வேண்டுமானாலும் உள்ளே வர முடியும்.

ரெயில்களில் சோதனை நடத்தும்போது யாராவது அந்த இடத்தை விட்டு நகர்ந்தால் அந்த நபர் சந்தேகத்துக்குரியவர் ஆவார். எனவே சோதனை நடத்தும் போலீசார் விழிப்புடன் இருந்து அதுபோன்ற நபர்களை பிடிக்க வேண்டும். பொதுமக்களும் தங்கள் வீடு மற்றும் பொது இடங்களில் விழிப்புடன் இருந்தால் சமூக விரோத செயல்களை தடுக்கலாம். அதற்கான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும்.

பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களில் கேட்பாரற்று கிடக்கும் பொருட்களை தொடக்கூடாது. அதுபற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் சந்தேகப்படும் நபர்களை பார்த்தாலும் அதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். பஸ், ரெயில்களின் ஜன்னல் ஓரத்தில் அமரும் பெண் பயணிகள் தங்களின் நகைகளை வெளியே தெரியாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

ரெயில்களில் இரவு நேரங்களில் பயணம் செய்பவர்கள் வண்டியின் கதவுகளை மூடி பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். ரெயில்களில் சந்தேகப்படும் படியாக கழிவறை கதவுகள் நீண்ட நேரம் உள்புறமாக மூடப்பட்டிருந்தால் அதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

அறிமுகமில்லாத நபர்கள் கொடுக்கும் குளிர்பானங்களையோ, திண்பண்டங்களையோ வாங்கி சாப்பிடக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்