புயலை முன்னிட்டு அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது

புயலை முன்னிட்டு அனைத்துத்துறை அலுவலர்களுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது.

Update: 2019-04-27 22:15 GMT
கிருஷ்ணகிரி,

தமிழகத்தில் நாளை (திங்கட்கிழமை), 30-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மற்றும் 1-ந் தேதி (புதன்கிழமை) ஆகிய நாட்களில் மழை மற்றும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி புயல் நாட்களில் இயற்கை பாதிப்புகள் ஏற்படாதவாறும், பொருட்சேதத்தை தவிர்க்கவும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் துறை வாரியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கிருஷ்ணகிரியில் நடந்தது.

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, வன அலுவலர் தீபக் பில்கி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:-

தமிழகத்திற்கு அடுத்து வரும் 3 நாட்கள் மழை மற்றும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணிற்கும், மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலக கட்டுப்பாட்டு எண் 230100 என்ற எண்ணிற்கும், தீயணைப்பு துறை கட்டுப்பாட்டு அலுவலகம் எண் 236101 மற்றும் 9445086360 என்ற செல்போன் எண்ணிற்கும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நகராட்சித்துறை சார்பாக மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்டறிந்து அங்குள்ள மக்களை பாதுகாப்பாக அருகில் உள்ள பள்ளி மற்றும் சமுதாய கூடங்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டுறவு துறை சார்பாக பொதுமக்களுக்கு தேவையான உணவுபொருட்களான பால்பவுடர், பால், பிரட், உணவு பொருட்களை வழங்கவேண்டும். மின்சாரத்துறை சார்பாக மின் வினியோகம் மற்றும் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் மின்சாரம் தடைபட்ட இடங்களில் மீட்பு நடவடிக்கைகளுக்காக பொக்லைன்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறை சார்பாக சாலைகளில் மரங்கள் அகற்றுவதற்கு தேவையான உபகரணங்கள், கிரேன், பொக்லைன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

வேளாண்மைத்துறை, தோட்டகலைத்துறை மற்றும் வருவாய் துறையினர் இணைந்து பயிர் சேதம் குறித்து புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கை சமர்பிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுப்பணித்துறை சார்பாக நீர்நிலைகளை கண்காணித்து ஏரிகளின் கரைகள் பலம் மற்றும் பலமற்றதை கண்டறிந்து உடனடியாக பணிகளை மேற்கொள்ள வேண்டும். நீர் வரத்து கால்வாய்கள், மதகுகள், ஆகியவற்றை ஆய்வுசெய்து தடையின்றி வெள்ள நீர் வெளியேற பணிகள் மேற்கொள்ள வேண்டும். முக்கியமாக சுகாதாரத்துறை மற்றும் நலப்பணிகள் துறை சார்பாக மருந்துகள் மற்றும் மருத்துவமனைகளில் அவசர வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

சுகாதாரமான குடிநீர் வழங்கும் வகையில் குளோரின் இருப்பு வைத்திருக்க வேண்டும். எனவே அனைத்துறை அலுவலர்களும் இணைந்து களப்பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகேஸ்வரி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் ராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமமூர்த்தி, ஓசூர் உதவி கலெக்டர் விமல்ராஜ், மின்சாரத்துறை மேற்பார்வை பொறியாளர் நந்தகோபால், நலபணிகள் இணை இயக்குநர் டாக்டர் அசோக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், பேரிடர் மேலாண்மை தனி தாசில்தார் மதுசெழியன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்