உலகைக் கவர்ந்த ‘படகு சிகிச்சை’

உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட குழந்தைக்கு, வெள்ள பாதிப்புக்கு மத்தியில் படகில் வைத்து டாக்டர்கள் மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட நிகழ்வு உலக சுகாதார நிறுவனத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Update: 2019-04-28 03:30 GMT
அந்த போட்டோ இந்த ஆண்டுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் காலண்டரிலும் இடம்பெற உள்ளது. இந்த மனிதநேய சம்பவம் கேரள மாநிலத்தில் நடந்தேறி உள்ளது.

அங்குள்ள குட்டநாடு அருகில் உள்ள சன்காம்காரி பகுதியை சேர்ந்தவருடைய நான்கு மாத குழந்தை கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பின்போது கடும் காய்ச்சலால் அவதிப்பட்டிருக்கிறது. உடனே எடத்துவாவில் உள்ள பொது சுகாதார மையத்துக்கு போனில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அங்கிருந்து விரைந்து வந்த டாக்டர்கள் குழந்தை இருக்கும் இடத்துக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டிருக்கிறார்கள். ஏனெனில் அந்த வீடு வயல்வெளிகளுக்கு மத்தியில் அமைந்திருந்திருக்கிறது.

வீட்டை சுற்றிலும் தண்ணீர் தேங்கி இருந்துள்ளது. குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த அந்த வீட்டிற்கு டாக்டர்கள் நாட்டு படகில் சென்றிருக்கிறார்கள். வீட்டு முன்பு படகை நிறுத்தி அதில் வைத்தே குழந்தைக்கு சிகிச்சை அளித்திருக்கிறார்கள். அப்போது உடன் சென்ற சுகாதார ஆய்வாளர் எம்.எல்.ஸ்ரீஜின் தனது கேமராவில் அதை படம்பிடித்திருக்கிறார். டாக்டர் பரிவோடு குழந்தையை தனது மடியில் தூக்கி வைத்து சிகிச்சை அளித்துக்கொண்டிருக்க, வீட்டில் உள்ளவர்களும், உடன் சென்றவர்களும் குழந்தையை தாய்மை உணர்வோடு பார்க்கும் விதம் பலருடைய கவனத்தை ஈர்த்து, உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.

இந்த புகைப்படத்தை எடுத்த ஸ்ரீஜின் கூறுகையில், ‘‘அந்த சமயத்தில் நாங்கள் ஆலப்புழாவில் வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்தோம். நான்கு மாத குழந்தை காய்ச்சலால் அவதிப்படுவதை அறிந்ததும் நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் குழந்தையின் இருப்பிடத்திற்கு விரைந்து சென்றோம். வீட்டை நெருங்கியதும் சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். அவர்களால் குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியே வர முடியாத நிலை இருந்தது. நாட்டு படகின் மூலம் அந்த வீட்டுக்கு செல்ல முடிவு செய்தோம். எனக்கும், நர்சுகளுக்கும் நீச்சல் தெரியாது. நாட்டு படகு மூழ்கும் நிலையில் சென்றதால் நாங்கள் பயந்து போனோம். குழந்தை இருக்கும் வீட்டை சென்றடைந்ததும் டாக்டர் சிகிச்சை அளித்தார். அப்போது நான் படகிலிருந்து நீருக்குள் இறங்கி எனது கேமராவில் படம் பிடித்தேன். அது யதார்த்தமாக அமைந்திருந்தது. இந்த படத்தை திட்டமிட்டு எடுக்கவில்லை. உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரத்தை பெறும் என்றும் எதிர்பார்க்கவில்லை’’ என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார்!

மேலும் செய்திகள்