இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலி, திருச்சி ரெயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக திருச்சி ரெயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

Update: 2019-04-26 23:14 GMT
திருச்சி,

இலங்கையில் கடந்த 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையின் போது தேவாலயம் உள்ளிட்ட இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு ஐ.எஸ். தீவிராத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இலங்கை நாட்டில் இன்னும் சகஜ நிலை திரும்பவில்லை.

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக இந்தியாவிலும் உஷார் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் போலீசாரை மேலும் உஷாராக இருக்கும்படி உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால் போலீசார் கண்காணிப்பு பணியை அதிகப்படுத்தி உள்ளனர். அதன்படி, தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சி சந்திப்பு ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரெயில்வே பாதுகாப்பு படையினர், ரெயில்வே போலீசார் கூட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று பகலில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை உதவி பாதுகாப்பு கமிஷனர் ஜார்ஜ் ஏபா தலைமையில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மெட்டல் டிடெக்கர் கருவிகள் மற்றும் 2 மோப்ப நாய்கள் உதவியுடன் அதிரடி சோதனை நடத்தினர். பயணிகளின் உடைமைகளையும், ரெயில் நிலைய நடைமேடைகளிலும், ரெயில்களிலும் பலத்த சோதனை மேற்கொண்டனர்.

பாலக்காடு பயணிகள் ரெயில், சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் சோதனையிட்டனர். இந்த சோதனையின் போது மர்மபொருட்கள் எதுவும் சிக்கவில்லை. இதேபோல திருச்சி ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு சுப்ரமணியன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஜாக்குலின் (திருச்சி), சிவவடிவேல் (மயிலாடுதுறை), சாந்தி (தஞ்சை) மற்றும் போலீசார் ரெயில் நிலையத்தில் சோதனை நடத்தினர்.

ரெயில் நிலையத்தில் இந்த அதிரடி சோதனையால் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே போலீசார் தெரிவித்தனர். இதேபோல ரெயில் நிலைய நடைமேடைகள், வளாகம் மற்றும் ரெயில்களில் சந்தேகப்படும் படி மர்மபொருட்கள் ஏதேனும் கிடந்தால், சந்தேக நபர்களை கண்டால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். 

மேலும் செய்திகள்