குண்டுவெடிப்பு சம்பவம் நடப்பதற்கு முன்பு இலங்கையில் இருந்து கோவை வந்த மர்ம நபர் யார்? தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை தீவிரம்

இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு முன்பு அங்கிருந்து கோவை வந்த மர்ம நபர் யார்? என்பது குறித்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-04-26 23:30 GMT
கோவை,

கோவையை சேர்ந்த இந்து மக்கள் கட்சி (தமிழகம்) தலைவர் அர்ஜுன் சம்பத், சக்திசேனா நிறுவனர் அன்புமாரி ஆகியோரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கோவையில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் (உபா) உள்பட 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் ஒருவர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் ரகசிய உறுப்பினர் என்பதும், மற்ற 6 பேரும் ஐ.எஸ். அமைப்பின் மீது தீவிர பற்று கொண்டவர்கள் என்பதும் தெரியவந்தது. இந்த வழக்கு என்.ஐ.ஏ.க்கு (தேசிய புலனாய்வு முகமை) மாற்றப்பட்டது. இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்ததுடன் அந்த 7 பேர் வீடுகளில் சோதனை செய்தனர். அதில் பென் டிரைவ், செல்போன் மற்றும் சிம்கார்டுகளை பறிமுதல் செய்தனர்.

அதில் ஒருவரின் செல்போனில் ஒரு வீடியோ இருந்தது. அந்த வீடியோவில் இலங்கையை சேர்ந்த ஒருவர் பேசுவதும், இலங்கையில் விரைவில் குண்டு வெடிப்பு சம்பவங்களை நிகழ்த்த உள்ளதாகவும் பேசி உள்ளார். இது தொடர்பான தகவலை என்.ஐ.ஏ. அதிகாரிகள் மத்திய அரசிடம் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக இலங்கை அரசுக்கு தெரிவித்து உஷார்படுத்தினார்கள்.

இந்த நிலையில்தான் இலங்கையில் கடந்த 21-ந் தேதி குண்டுவெடித்தது. இந்த கோர சம்பவத்தை நிகழ்த்திய ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை சேர்ந்த சிலருடன் கோவையை சேர்ந்த வாலிபர்கள் 6 பேர் முகநூல் (பேஸ்புக்) மூலம் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டு உள்ளது.

இது தொடர்பாக என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள், சிறப்பு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் கோவையை சேர்ந்த வாலிபர்களின் செல்போன் எண், அவர்களின் முகநூல், இ-மெயில் ஆகியவற்றையும் கண்காணித்து வருகிறார்கள். இதற்கிடையே இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு இலங்கையை சேர்ந்த மர்ம நபர் ஒருவர் கோவை வந்து உள்ளார். அந்த நபர் கோவையில் 3 நாட்கள் தங்கி இருந்ததாகவும், கோவையை சேர்ந்த சிலரை அந்த நபர் சந்தித்து பேசியதுடன், அவர்களுடன் பல்வேறு தகவல்களை பரிமாறிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அந்த நபர் யார்? எப்படி அவர் கோவை வந்தார்? நேரடியாக இலங்கையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தாரா? அல்லது கேரளாவில் இருந்து கோவைக்குள் வந்தாரா? அந்த நபர் யாரை எல்லாம் சந்தித்து பேசினார்? அவர்களிடம் பரிமாறிக்கொண்ட தகவல் என்ன? என்பது குறித்து எதுவும் போலீசாருக்கு தெரியவில்லை.

இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் சிறப்பு நுண்ணறிவு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அத்துடன் இந்த மாதம் 1-ந் தேதியில் இருந்து இலங்கையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்தவர்கள் யார்? என்பது குறித்த பட்டியலையும் போலீசார் தயார் செய்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

மேலும் செய்திகள்