சிதம்பரம் அருகே, பிளஸ்-1 மாணவியை கடத்தி கட்டாய திருமணம் - போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
சிதம்பரம் அருகே பிளஸ்-1 மாணவியை கடத்தி கட்டாய திருமணம் செய்த வாலிபர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கடலூர்,
சிதம்பரம் அருகே உள்ள மேல்புவனகிரியை சேர்ந்தவர் செந்தில். இவருடைய மகன் சூர்யா என்கிற சூரியமூர்த்தி(வயது 21). இவரும், சிதம்பரம் தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்த 17 வயது மாணவியும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி வீட்டில் இருந்த மாணவி, திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
இதனிடையே மாணவியின் தாய், சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், வீட்டில் இருந்த தனது மகளை, சூர்யா என்கிற சூரியமூர்த்தி கடத்திச்சென்று விட்டதாகவும், கண்டுபிடித்து தனது மகளை மீட்டு தருமாறும் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியையும், சூரியமூர்த்தியையும் தேடி வந்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், மாணவியுடன் சூர்யமூர்த்தி சேத்தியாத்தோப்பு அருகே ஒரு கிராமத்தில் தங்கி இருப்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அங்கு விரைந்து சென்று, இருவரையும் மீட்டு சிதம்பரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், சூர்யமூர்த்தி, அந்த மாணவியை கடத்திச்சென்று சேத்தியாத்தோப்பு அருகே உள்ள ஒரு கோவிலில் கட்டாய திருமணம் செய்து கொண்டதும், பின்னர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து போச்சோ சட்டத்தின் கீழ் சூர்யமூர்த்தியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.