பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்து சென்ற கப்பல்கள், புயல் எச்சரிக்கையால் பாதுகாப்பாக நிறுத்தி வைப்பு
கப்பல்கள் கடந்து செல்வதற்காக பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலம் நேற்று திறக்கப்பட்டது. மொத்தம் 6 கப்பல்கள் பாலத்தை கடந்து சென்றன. புயல் முன்எச்சரிக்கையாக அந்த கப்பல்கள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டன.
ராமேசுவரம்,
ராமேசுவரம் அருகே பாம்பன் பாலத்தை கப்பல்கள் கடந்து செல்வதற்காக, ரெயில்வே தூக்குப்பாலம் முன்பு வாரம் ஒருமுறை திறக்கப்பட்டது. ஆனால் தற்போது மாதம் ஒருமுறைதான் தூக்குப்பாலம் திறக்கப்படும் என ரெயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சில கப்பல்கள் பாம்பன் பாலத்தை கடந்து செல்வதற்காக குந்துகால் கடல் பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாகவே காத்திருந்தன. ரெயில்வே தூக்குப்பாலமானது நேற்று காலை 6.30 மணி அளவில் திடீரென திறக்கப்பட்டது. அப்போது கோவாவிலிருந்து வந்த பெரிய சரக்கு கப்பலும், மும்பையில் இருந்து விசாகப்பட்டினம் செல்வதற்காக வந்த இழுவைக் கப்பலை இழுத்த படி பெரிய மிதவைக் கப்பலும் தூக்குப் பாலத்தை கடந்து சென்றன.
அதை தொடர்ந்து கொச்சியில் இருந்து வந்த இழுவைக் கப்பலும், கடலூர் செல்வதற்காக காத்திருந்த பாய்மரப்படகும் கடந்து சென்றன. அதை தொடர்ந்து சென்னையிலிருந்து கொச்சி செல்வதற்காக மிதவைக் கப்பல் ஒன்றும் கடந்து சென்றது.
இதற்கிடையே சென்னையில் இருந்து ராமேசுவரம் வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலுக்காக தூக்குப் பாலம் வேகமாக மூடப்பட்டது. மீண்டும் திருச்சி பயணிகள் ரெயிலானது பாலத்தை கடந்து ராமேசுவரம் சென்ற பின்பு, பகல் 12.30 மணி அளவில் தூக்குப் பாலமானது 2-வது முறையாக மீண்டும் திறக்கப்பட்டது.
அப்போது கொல்கத்தா செல்வதற்காக பெரிய மிதவைக் கப்பல் ஒன்று தூக்குப் பாலத்தை கடந்து சென்றது. ஒரே நாளில் 6 கப்பல்கள், ஒரு பாய்மரப்படகு மற்றும் ஏராளமான மீன்பிடி படகுகள் பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்து சென்றதை ரோடு பாலத்தில் நின்றபடி ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
வங்க கடலில் புயல் சின்னம் உருவாகி வருவதால் பாம்பன் பாலத்தை கடந்து சென்ற பாய்மரப் படகை தவிர மற்ற அனைத்து கப்பல்களும் பாதுகாப்பு கருதி பாம்பன் வடக்கு மற்றும் தென் கடல் பகுதியில் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.