கோவில் திருவிழாவில் நடந்த ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் கல்வீச்சு, பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மண்டை உடைந்தது - 9 பேர் கைது- 14 பேருக்கு வலைவீச்சு
நாகப்பட்டினம் அருகே கோவில் திருவிழாவையொட்டி நடந்த ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் கல்வீசப்பட்டதில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மண்டை உடைந்தது. இதுகுறித்து 9 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 14 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்டம் திருவெண்காடு அருகே இளையமதுகூடம் கிராமத்தில் காளியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக திருவெண்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் கோவிலின் முன்பு திரண்டனர். ஆனால் இந்த நிகழ்ச்சியை நடத்த போலீசாரிடம் உரிய முன்அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரியா சென்றார். பின்னர் அவர், உரிய அனுமதி பெறாமல் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்துவது குறித்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது திடீரென அங்கிருந்த பொதுமக்கள், போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் இன்ஸ்பெக்டரை நோக்கி கற்களை வீசினர். இதில் இன்ஸ்பெக்டர் சுப்பிரியாவின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
உடனடியாக இன்ஸ்பெக்டரை அங்கிருந்த போலீசார் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக திருவெண்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டரை கல்வீசி தாக்கிய இளையமதுகூடம் பகுதியை சேர்ந்த பிரவீன்குமார்(வயது 26), மணிகண்டன்(22), கமல்(22), ராஜேந்திரன்(55), விக்னேஷ்(24), நளன்(25), மணிவண்ணன்(28), செல்வராஜ்(26), கண்ணன்(25) ஆகிய 9 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 14 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் திருவெண்காடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.