நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு பொதுமக்கள் பார்வைக்கு வைப்பு
நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவைகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
நெல்லை,
இதுகுறித்து நெல்லை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நெல்லை மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான கிராம பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன், மாவட்ட பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்துக்கள், நகரசபை மற்றும் மாநகராட்சி வார்டுகள் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வரையறை செய்யப்பட்டு உள்ளது.
2011-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளுக்கு ஏற்ப 2011-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலுக்கான ஊரகம், நகர்புற பகுதியில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாவட்ட கலெக்டரின் ஒப்புதல் பெறப்பட்டு கீழ்க்கண்ட இடங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஊரக வாக்குச்சாவடி பட்டியல்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் (வளர்ச்சிப்பிரிவு), மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம் (கே.டி.சி.நகர்), அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், அனைத்து கிராம பஞ்சாயத்து அலுவலகங்களில் வைக்கப்பட்டு இருக்கிறது.
மாநகராட்சி வாக்குச்சாவடி பட்டியல் நெல்லை மாநகராட்சி அலுவலகம், நெல்லை, தச்சநல்லூர், மேலப்பாளையம், பாளையங்கோட்டை மண்டல அலுவலகங்கள், மாநகராட்சி வார்டு அலுவலகங்களில் வைக்கப்பட்டு இருக்கிறது.
நகரசபை வாக்குச்சாவடி பட்டியல்கள் நெல்லை நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலகம், புளியங்குடி, கடையநல்லூர், சங்கரன்கோவில், தென்காசி, செங்கோட்டை, விக்கிரமசிங்கபுரம், அம்பை ஆகிய நகரசபைகளிலும், நகரசபை வார்டு பகுதிகளிலும் வைக்கப்பட்டு இருக்கின்றன.
நகரப்பஞ்சாயத்துக்களின் வாக்குச்சாவடி பட்டியல்கள் நெல்லை உதவி இயக்குனர் (பேரூராட்சி) அலுவலகம், அனைத்து நகர பஞ்சாயத்து அலுவலகங்கள், நகர பஞ்சாயத்து வார்டு பகுதிகளில் வைக்கப்பட்டு உள்ளன.
அறிவிப்பு செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியல் பற்றி பொதுமக்கள், தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் மாவட்ட பிரதிநிதிகள் வாக்குச்சாவடி மறுப்புகளை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தெரிவிக்கலாம்.
வருகிற 30-ந் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷில்பா தலைமையில் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.