ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதால் சுகாதாரக் கேடு

ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதால், சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2019-04-26 21:30 GMT
ஸ்ரீவைகுண்டம்,

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளம் கொழிக்கச் செய்யும் தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை ஸ்ரீவைகுண்டத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து வடகால், தென்கால் மூலம் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. தற்போது ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் தண்ணீரின் அளவு குறைந்ததால், கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதற்கிடையே ஸ்ரீவைகுண்டம் நகரில் உள்ள வீடுகள், ஆஸ்பத்திரிகளில் உள்ள கழிவுநீரானது வாரச்சந்தை பின்புறமுள்ள வடகால் வாய்க்காலில் நேரடியாக கலக்க விடப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது.

ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்கால் வழியாக ஏரல், தூத்துக்குடி பகுதிகளில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இது அப்பகுதி மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்கால் கரையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. எனவே அந்த இடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, கழிவுநீரை சுத்தம் செய்து ஆற்றில் கலக்கவிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்