இலவசமாக நிமோனியா தடுப்பூசி வழங்கும் திட்டம் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தொடங்கப்பட்டது
எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் இருதய நோய், நுரையீரல் நோய் தொற்று உள்ள குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தட்டம்மை, போலியோ, ரோட்டா வைரஸ் உள்ளிட்ட 11 வகையான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நிமோனியா காய்ச்சல் வராமல் தடுக்கும் ‘நியூமோ காக்கல்’ தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படுவதில்லை. இந்த தடுப்பூசியின் விலை ரூ.4 ஆயிரம் ஆகும். இதனால், அந்த வகை தடுப்பூசி போட வேண்டும் என்றால் தனியார் மருத்துவமனைகளையே மக்கள் நாட வேண்டிய நிலை இருந்தது.
இந்த நிலையில் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் இருதய நோய், நுரையீரல் நோய் தொற்று உள்ள குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து மருத்துவ மனையின் இயக்குனர் டாக்டர் அரசர் சீராளர் கூறியதாவது:-
தமிழகத்தில் முதல் முறையாக சோதனை அடிப்படையில் நிமோனியா தடுப்பூசி, இலவசமாக குழந்தைகளுக்கு வழங்கும் திட்டம் எழும்பூர் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட குழந்தைகள், நுரையீரலில் உள்ள நோய்க்காக சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இதனால் நிமோனியா காய்ச்சல் வர அதிக வாய்ப்புள்ளது. அந்த குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.