திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 31 உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு 3 கிலோ உணவு அழிப்பு
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் 31 உணவகங்களில் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது 3 கிலோ உணவு கைப்பற்றி அழிக்கப்பட்டன.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி உத்தரவின்படி, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை வழிகாட்டுதலின்படி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எட்டிக்கன் மற்றும் மணி ஆகியோர் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் செயல்பட்டு வரும் உணவகங்கள், ஓட்டல்கள் மற்றும் தள்ளுவண்டி சிற்றுண்டி கடைகள் ஆகியவற்றில் நேற்று ஆய்வு செய்தனர்.
வடக்கு பகுதியில் புதிய பஸ்நிலையம், பி.என்.ரோடு, போயம்பாளையம், குமார்நகர், அவினாசி ரோடு, தெற்கு பகுதியில் பழைய பஸ்நிலையம், மங்கலம் ரோடு, டைமண்ட் தியேட்டர் ரோடு, ஊத்துக்குளி ரோடு, ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் சிற்றுண்டி உணவகங்கள், ஓட்டல்கள், தள்ளுவண்டி சிற்றுண்டி உணவகங்கள் என்று மொத்தம் 31 இடங்களில் ஆய்வு செய்தனர்.
அப்போது, உணவின் தரம், சமையல் செய்யும் இடம், பாதுகாக்கப்பட்ட குடிநீர், பணியாளர்களின் தன்சுத்தம், சுற்றுப்புற சுகாதாரம், உணவு பாதுகாப்பு உரிமம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் 7 உணவகங்களில் அதிகாலையில் தயாரிக்கப்பட்டு மீதமான உணவுகளான இட்லி, பூரி, சப்பாத்தி, பிளாஸ்டிக் கவர்களில் பேக்கிங் செய்யப்பட்ட சட்னி, சாம்பார், குருமா ஆகியவை சுமார் 3 கிலோ கைப்பற்றி அழிக்கப்பட்டது.
இனி வருங்காலங்களில் பழைய உணவுகளை வழங்கக்கூடாது எனவும், மீதமான உணவுகளை குளிரூட்டி பதப்படுத்தி மீண்டும் விற்கக்கூடாது எனவும், தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தக்கூடாது எனவும் உணவக உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது. உணவு வகைகளை வாழை இலைகளில் தான் கட்டிக்கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. உணவு பாதுகாப்பு உரிமம் பெறாத உணவகங்கள் உரிமம் பெற அறிவுறுத்தப்பட்டன. இந்த ஆய்வு பணி தொடர்ந்து நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.